கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் கல்வித் துறையும் ஒன்றாகும்.
CBSE 2021, JEE 2021, NEET 2021 ஆகியவற்றின் தேர்வு தேதிகள் குறித்து அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் (Ramesh Pokhriyal Nishank) வியாழக்கிழமை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் வெபினார் மூலம் கந்துரையாடி அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.
மாணவர்களும் மற்ற பலரும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் ஹேண்டிலான @DrRPNishank மற்றும் அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அவருடன் கலந்துரையாடினர்.
உரையாடலின் போது, 2021 ஆம் ஆண்டில் CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்றும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் பொக்ரியால் கூறினார்.
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் (Board Exams) தேதிகளை அறிவிக்கும் வேளையில், மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக போதுமான நேரம் அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
CBSE ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளது என்ற குறிப்பை அளித்த பொக்ரியால், மாணவர்கள் இதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் NEET 2021 மற்றும் JEE 2021 தேர்வுகளும் கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சருடனான கலந்துரையாடலில் மருத்துவ நுழைவுத் தேர்வான NEET 2021 ரத்து செய்யப்படுமா என்று மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதிலளித்த பொக்ரியால் NEET 2021 தேர்வை ரத்து செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். அப்படிப்பட்ட ஒரு முடிவு பல மாணவர்களை வெகுவாக பாதிக்கும். "NEET 2021 ரத்து செய்யப்படாது. அப்படி ரத்து செய்யப்பட்டால், அது மாணவர்களுக்கும் தேசத்திற்கும் பெரிய இழப்பாக இருக்கும்." என்றார் ரமேஷ் போக்ரியால்.
"நாங்கள் 2020 ஆம் ஆண்டில் மூன்று முறை NEET தேர்வை ஒத்திவைத்தோம். மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கினோம். நாங்கள் தேர்வை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இது மாணவர்களுக்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பாக இருந்திருக்கும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
ALSO READ: தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?
NEET தேர்வு எப்போதும் தேசிய தேர்வு முகைமையால் (NTA) இதுவரை ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் COVID-19 தொற்று காரணமாக, NEET 2021 ஐ ஆன்லைன் முறையில் நடத்த NTA ஆலோசித்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
"நாங்கள் இப்போது வரை NEET ஐ ஆஃப்லைன் பயன்முறையில் நடத்தியுள்ளோம். ஆனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் NEET தேர்வை எழுத விரும்பினால், நாங்கள் அதையும் கருத்தில் கொள்ள தயாராக உள்ளோம்” என்று அமைச்சர் கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR