பிரயாகராஜ்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் (Allahabad High Court) உத்தரவு மிகப்பெரிய அடியாக மாநில அரசுக்கு விழுந்துள்ளது. அதாவது ஓ.பி.சி.-யை (OBC) சேர்ந்த 17 சாதிகளை எஸ்.சி.யில் (SC) சேர்க்கும் உ.பி. அரசின் ஆணையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், உ.பி. சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மனோஜ் குமார் சிங்கிடம் வாக்குமூலம் கோரியுள்ளது.
ஓ.பி.சி.யின் கீழ் வரும் சாதிகளை எஸ்.சி.யில் சேர்ப்பதற்க்கான ஆணையை உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஜூன் 24 அன்று உத்தரவை பிறப்பித்தது. உ.பி. அரசாங்கத்தின் உத்தரவுக்குப் பிறகு, சமூக சேவகர் கோரக் பிரசாத் மறு ஆய்வு மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்தனர்.
அப்பொழுது யோகி அரசாங்கத்தின் முடிவு தவறானது என்று நீதிமன்றம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. இதுபோன்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது. இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், அது நாட்டின் நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும். பாராளுமன்றத்தில் தேவையான நடைமுறைகளை பின்பற்றிய பின்னரே, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வகை குறித்து முடிவு எடுக்க முடியும். ஒரு மாநில அரசு உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எடுக்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.