ரபேல் ஊழல் குறித்து தன்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட பிரதமர் மோடி தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!
மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 11 துவங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் சமூக ஊடங்களின் உதவி கொண்டும், தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தன்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட பிரதமர் மோடி தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
Dear PM,
Scared of debating me on corruption? I can make it easier for you.
Let’s go open book, so you can prepare:
1. RAFALE+Anil Ambani
2. Nirav Modi
3. Amit Shah+Demonetisation #Scared2Debate— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2019
"அன்புள்ள பிரதமர் அவர்களே, ஊழல் குறித்து என்னுடன் விவாதிக்க அஞ்சுகிறீர்களா?
நான் உங்களுக்கு எளிதான வழியை கூறுகிறேன். கீழ்காணும் தலைப்புகளில் சற்று தங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
- ரபேல்+ அனில் அம்பானி,
- நிரவ் மோடி,
- அமித் ஷா+ பணமதிப்பிழப்பு"
என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட பின்னர், நாட்டின் பாதுகாப்பு, ஊழல் மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆகியவை குறித்து விவாதம் செய்ய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். மேலும் மோடியின் உதவியுடன் தான், அனில் அம்பானி ரபேல் ஊழலில் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினார் என ஏற்கனவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.