பாபர் மசூதி-ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள 3 நபர் மத்தியஸ்த குழு இன்று அயோத்தி சென்று ஏற்பாடுகளை பார்வையிட உள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 3 பிரிவினரம் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. நீதிபதி போப்டே விடுப்பில் இருந்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோயி அக்சரா, வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புமீது 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மீகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்த குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
அயோத்தியில் இருந்து மத்தியஸ்த குழு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குழுவினர் தங்குவதற்கான இடங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரங்கங்கள், அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்தியஸ்த குழுவுக்கு உதவுவதற்காக அவத் பல்கலைக்கழக வளாகத்தில் செயலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்தியஸ்த குழு இன்று அயோத்தி செல்கிறது. அங்கு மத்தியஸ்த குழு செயல்படுவதற்காக உத்தரப்பிரதேச அரசு செய்துள்ள ஏற்பாடுகளை முதலில் பார்வையிடும் குழுவினர், பின்னர் முறைப்படி மத்தியஸ்த பணிகளை தொடங்க உள்ளனர். மத்தியஸ்த நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.