நானும் பெரிய ரவுடி தான் - முலாயம் சிங்

Last Updated : Oct 24, 2016, 02:54 PM IST
நானும் பெரிய ரவுடி தான் - முலாயம் சிங் title=

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முலாயமின் சகோதரர்கள் சிவ்பால் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் அமைச்சராக உள்ளனர்கள். 

அகிலேசுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவ்வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்வரின் முஸ்லிம் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால் அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். மேலும் சிவபால் யாதவை மந்திரி பதவியில் இருந்து அகிலேஷ் நீக்கினார். 

இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்து மீண்டும் அவரை மந்திரியாக்கினார். அதோடு சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கியதோடு, மாநில சமாஜ்வாடி தலைவராக சிவபால் யாதவ் நியமிக்கப்பட்டார். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக வெளிப்படையாக மோதல் வெடித்தது. 

இந்த சர்ச்சை நிலுவும் நிலையில் அகிலேஷ் யாதவின் ஆதரவாளரான உதய்வீர் சிங் கடந்த வாரம் முயலாம் சிங் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தங்களது 2-வது மனைவியால் கட்சியில் குழப்பம் ஏற்படுவதாக குற்றம் சாட்டி எழுதியிருந்தார். இதனால் சமாஜ்வாடி கட்சியில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து உதய்வீர் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

வரும் 24-ம் தேதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க் கள், எம்.எல்.சி.க்கள் கூட்டம் நடைபெறும் என முலாயம்சிங் அறிவித்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக அகிலேஷ் யாதவ் நேற்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். கூட்டம் முடிந்ததும் சிவபால் யாதவ் உள்பட 4 பேரை நீக்கி உத்தரவிட்டார். 

அகிலேஷ்யாதவின் நடவடிக்கையால் பெரும் அதிர்ச்சி அடைந்த முலாயம்சிங் யாதவ் மற்றும் சிவ பால் யாதவ் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக உள்ள ராம் கோபால் யாதவிடம் இருந்து பதவிகளைப் பறித்து முலாயம் சிங் யாதவ் பதிலடி கொடுத்தார். மேலும் பா.ஜ.க. வுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததால் ராம்கோ பால் யாதவ் 6 ஆண்டுகளுக்கு சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

முலாயம் சிங்கும், அவரது மகன் அகிலேஷ் நடவடிக்கையால் சமாஜ்வாடி கட்சியில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவேதான் இன்று அவர் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைகிறது. தற்போது சமாஜ் வாடி கட்சி மூத்த தலைவர்கள் முலாயம்சிங் ஆதரவாளர்களாகவும் அகிலேஷ் ஆதரவாளர்களாகவும் இரு பிரிவாக உள்ளனர். எனவே சமாஜ் வாடி கட்சி பிளவுபட்டால் சரி பாதியாக இரண்டாக உடையும் நிலை உருவானது, சமாஜ்வாடி இரண்டாக பிளவுபடும் பட்சத்தில் தாய்க் கட்சியான சமாஜ்வாடியும் சைக்கிள் சின்னமும் முலாயம் சிங் யாதவ் வசமே இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அகிலேஷ் யாதவ் தன் ஆதரவு தலைவர்கள் எம்.எல். ஏ.க்களை வைத்து புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் "நான் புதிய கட்சியை தொடங்க போவது இல்லை என்றும், எனது தந்தையே எனது குரு என்றும்" கூறியுள்ளார். மேலும் முதலவர் அகிலேஷ் யாதவ்  சமாஜ்வாதி கட்சியை உருவாக்கியவர் எனது தந்தை, ஆனால் அவருடன் நெருக்கமாக இருக்கும் அமர்சிங் மற்றும் இன்னும் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:- சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் கவலை அளிக்கிறது. தற்போது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் தங்களை மிகப் பெரிய ரவுடிகளாக நினைக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல நான் பலவீனப்படவில்லை. கட்சியை நான் உருவாக்கினேன். உங்களை விட மிகப் பெரிய ரவுடி நான்தான். சிவ்பால் யாதவ் எனக்காகவும் கட்சிக்காகவும் செய்தவைகளை அப்படி ஒன்றும் எளிதாக மறந்துவிட முடியாது. சிவ்பால் யாதவ் சாதாரண மனிதர் அல்ல. மக்கள் தலைவர். அமர்சிங் என்னுடைய சகோதரர். மிகவும் கடினமான நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்தவர். அமர்சிங்கும் மற்றும் சிவபால் யாதவும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். சிவபால், அமர்சிங்கிற்கு எதிரான கருத்துகளை கேட்க மாட்டேன். சிவபால் கட்சிக்கு செய்த பணியை மறக்க முடியாது.

அகிலேஷ் பதவி நீக்கம் செய்யப்பட மாட்டார். அவரே முதல்வராக நீடிப்பார். சிவபாலுடன் அகிலேஷ் இணைந்து செயல்பட வேண்டும் பிரச்னைக்கு அமைதி காண வேண்டும்" என்றார்.

 

 

Trending News