வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தாக்க உள்ள வாயு புயல் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என பிரதமர் மோடி ட்வீட்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 12, 2019, 04:07 PM IST
வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்
Photo: Reuters

புது டெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு, குஜராத்தின் போர் பந்தர் - மஹுவா இடையே நாளை காலை கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், 24 - 48 மணி நேரத்தில், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ஜ் பகுதிகளை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் முன்னோட்டமாக, வல்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரூபானி உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாயு புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தாக்க உள்ள வாயு புயல் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நான் தொடர்ந்து மாநில அரசுகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

தேசிய அனர்த்த நிவாரணப் படை மற்றும் பிற நிவாரண ஏஜென்சிகள், மக்களுக்கு தேவையான எல்லாவிதமான உதவிகளையும் வழங்க தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.