இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம்

NSE Scam: சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத யோகி ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2022, 05:34 PM IST
  • தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், எம்டி-யுமான சித்ரா ராமகிருஷ்ணா இப்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்.
  • இமயமலையில் வசிக்கும் யோகி ஒருவருடன் என்எஸ்இ-யின் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • அவர் கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத யோகி ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம் title=

புதுடெல்லி: என்எஸ்இ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி இமாலய சாமியார் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு பங்குச் சந்தையை நடத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது மும்பை வீட்டில் சோதனை நடந்தது. அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பின்னணி என்ன? அவர் செய்த முறைகேடுகள் என்ன? விரிவாக காணலாம்.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், எம்டி-யுமான சித்ரா ராமகிருஷ்ணா இப்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். பிப்ரவரி 11ஆம் தேதி விதிக்கப்பட்ட 3 கோடி ரூபாய் அபராதத்துக்குப் பிறகு, தற்போது அவரது மும்பை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவருடன் என்எஸ்இ-யின் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல வணிக விஷயங்களில் வழிகாட்டுதல்கள் கேட்கப்பட்டன

சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத சாமியார் ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, இந்த ஆன்மீக குருவின் விருப்பப்படி மூத்த அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சித்ரா நியமித்திருந்தார். என்எஸ்இ-யில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, ஆனந்த் சுப்ரமணியம் ஒரு சாமானிய மனிதராக இருந்தார்.

14 லட்சம் சம்பளம் 4 கோடி ஆனது 

ஆனந்த் சுப்ரமணியம் பால்மர் லாரி மற்றும் ஐசிஐசிஐ குழுமத்தின் ஒரு கூட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு, அவரது ஆண்டு ஊதிய பேக்கேஜ் ரூ.14 லட்சத்தை விட சற்று அதிகமாக இருந்தது. ஏப்ரல் 2013ல், அவருக்கு என்எஸ்இ-யில் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வின் தலைமை வியூக ஆலோசகராக (சி.எஸ்.ஏ) என்ட்ரி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு ரூ.1.38 கோடி வருடாந்திர பேக்கேஜ் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டுக்குள், அதாவது  இரண்டு மூன்று ஆண்டுகளில் சுப்பிரமணியத்தின் ஊதியத் தொகுப்பு ரூ 4.21 கோடியாக உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: தவறுகளை மன்னிக்க முடியாது- எச்சரித்த உச்சநீதிமன்றம்

2013 முதல் 2016 வரை எம்டி மற்றும் சிஇஓ ஆக இருந்தார்

சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் மீதான வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு புகார்களை விசாரிப்பதே இந்த சோதனையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். என்எஸ்இயின் பொருளாதாரம் மற்றும் வணிகத் திட்டங்கள் உள்ளிட்ட துறைசார் நுண்ணறிவை சித்ரா ராமகிருஷ்ணா யோகி ஒருவருடன் பகிர்ந்து கொண்டதாக செபி தனது உத்தரவில் கூறியிருந்தது. அவர் ஏப்ரல் 2013 முதல் டிசம்பர் 2016 வரை NSE இன் MD மற்றும் CEO ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் சுப்ரமணியம் யார்?

சித்ரா ராமகிருஷ்ணாவின் சில முடிவுகள் பற்றிய விவாதம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனந்த் சுப்ரமணியம் என்எஸ்இ-யில் பெரும் சம்பள உயர்வுடன் நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு தன்னிச்சையாக பதவி உயர்வு கிடைத்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இமாலய யோகி கூறியதால், அவர், NSE இல் 2வது இடத்துக்கு உயர்த்தப்பட்டார். 

எந்த அனுபவமும் இல்லாமல் பதவி உயர்வு கிடைத்தது

சுப்ரமணியத்திற்கு மூலதனச் சந்தையில் அனுபவம் இல்லை. இருப்பினும் அவருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் தொடர்ந்து கிடைத்தன. இரண்டே ஆண்டுகளில், அதாவது 2016ல் அவரது ஊதியத் தொகுப்பு ரூ.4.21 கோடியாக அதிகரித்தது. இதுமட்டுமின்றி, அவருக்கு குழு இயக்க அதிகாரி (GOO) பொறுப்பும் வழங்கப்பட்டது.

சுப்ரமணியனுக்கு பல நன்மைகள் கிடைத்தன

இந்தக் காலப்பகுதியில் சுப்ரமணியம் பல வசதிகளைப் பெற்றிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்தும் சென்னையிலிருந்தும் பணிபுரியும் வசதி இதில் ஒன்று. அவருக்கு வசதியாக பிரத்யேக அமைப்புகளை அமைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனந்த் GOO ஆன பிறகும் இந்த வசதியை தொடர்ந்து பெற்றார்.

அக்டோபர் 2016 இல் ராஜினாமா செய்தார்

என்எஸ்இ-யின் தணிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சுப்ரமணியத்தின் நியமனம் தவறான முறையில் செய்யப்பட்டது தெரிய வந்தது. விசாரணை அறிக்கையில் ஆய்வுக்குப் பிறகு, சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க | இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி: வங்கிகளுக்கு ரூ. 22,842 கோடி நாமம் போட்ட நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News