Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த எதிர்ப்பு?

Citizenship Amendment Act: CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2024, 09:01 AM IST
  • குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
  • குடியுரிமை வழங்க எத்தனை காலம் ஆகும்?
  • சிஏஏ -வை சிலர் எதிர்க்க காரணம் என்ன?
Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த எதிர்ப்பு? title=

Citizenship Amendment Act: மார்ச் 11, 2024, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்!! வருங்கால சந்ததியினர் நினைவில் வைத்திருக்கும் நாளாக இது இருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இந்த தேதி முதல் அமலுக்கு வந்தது. உள்துறை அமைச்சகம் CAA விதிகளைப் பற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, ​​இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இன்றும் இதற்கு எதிர்ப்பு உள்ளது. பல மாநிலங்கள் இதை செயல்படுத்த முடியாது என கூறியுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதை சிலர் எதிர்க்க காரணம் என்ன? இதைப் பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? (What is CAA)

11 டிசம்பர் 2019 அன்று குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கபட்டது. ஆனால் அப்போது இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதில், குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டது. டிசம்பர் 2014 க்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இருந்து துன்புறுத்தலுக்கு ஆளாகிய இந்தியா வந்த சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற விதி இதில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை வழங்க எத்தனை காலம் ஆகும்?

இந்த மசோதாவின் படி, அகதிகளுக்கு 6 ஆண்டுகளுக்குள் இந்திய குடியுரிமை வழங்கப்படும். சட்ட திருத்தத்தின் மூலம், இந்த அகதிகளின் குடியுரிமைக்கான தேவை 11 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் எனவென்றால், CAA என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல, மாறாக இது குடியுரிமை வழங்கும் சட்டம்.

முதல் முறையாக இந்த மசோதா எப்போது வந்தது?

மோடி அரசாங்கம் முதன்முதலில் குடியுரிமை திருத்த மசோதாவை 2016 ஆம் ஆண்டும் மக்களவையில் கொண்டு வந்தது. மக்களவையில் (Lok Sabha) மசோதாவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், மாநிலங்களவையில் (Rajya Sabha), இந்த மசோதாவுக்கு அப்போது பெரும்பான்மை கிடைக்காததால் நிறைவேற்றப்பட முடியவில்லை. இந்த மசோதா பின்னர் நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதற்குள் 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. அந்த தேர்தலில் கடந்த முறையை விட பலத்த பெரும்பான்மையுடன் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. குடியுரிமை திருத்த மசோதா மீண்டும் 2019 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு நிறைவேற்றப்பட்ட பின், மாநிலங்களவையிலும் இம்முறை நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 10, 2020 அன்று, குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். எனினும், அதை உடனடியாக அமல்படுத்த முடியாமல் நாட்டை, உலகை கொரோனா பெருந்தொற்று ஆட்கொண்டது. 

சிஏஏ -வை சிலர் எதிர்க்க காரணம் என்ன? 

எதிர்க்கட்சிகளும் சில முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிராக உள்ளனர். அகதிகளின் பட்டியலில் முஸ்லீம் சமூகம் பற்றி குறிப்பிடப்படாததால், அவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், இது அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் சமத்துவ உரிமையை மீறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலரிடமிருந்து எழுந்துள்ளது.

மேலும் படிக்க | மத சிறுபான்மையினரை இந்தியர்களாக அங்கீகாரம் அளிக்கும் இந்தியா! திருத்தப்பட்டது குடியுரிமை சட்டம்!

இதுவரை குடியுரிமை பெறுவதற்கான வழிமுறை என்னவாக இருந்தது? 

ஒரு நபர் இந்தியாவின் குடியுரிமை பெற விரும்பினால், அவர் குறைந்தது 11 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் புதிய சட்டத்தில், மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும். எனினும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள், அவர்கள் எந்த மதம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியாவில் 11 வருட கால அளவை முடிக்க வேண்டும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு என்ன மாற்றம் வரும்? 

புனர்வாழ்வு மற்றும் குடியுரிமை தொடர்பான சட்ட தடைகளை நீக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று மோடி அரசாங்கம் (Modi Government) கூறியுள்ளது. பல தசாப்தங்களாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ள முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவது இந்த சட்டத்தின் முக்கிய இலக்காக இருக்கும். இது மட்டுமின்றி குடியுரிமை உரிமைகள் அவர்களின் மொழி, கலாச்சார மற்றும் சமூக அடையாளத்தை பாதுகாக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இதனுடன் வணிகம், பொருளாதாரம், சுதந்திரமான நடமாட்டம், சொத்து வாங்குதல் போன்ற உரிமைகள் நாட்டிற்கு வந்து குடியுரிமை பெற்ற அகதிகளுக்கு உறுதி செய்யப்படும்.

இந்த புதிய சட்டத்தால் யாராவது குடியுரிமையை இழப்பார்களா?

அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இந்த சட்டம், வருடக்கணக்கில் அடக்குமுறையை சகித்து, இந்தியாவைத் தவிர செல்ல உலகில் வேறு இடமில்லாத நபர்களுக்கானது. 

CAA: இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? (How To Apply For CAA)

- சிஏஏ -வை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு போர்ட்டலை உருவாக்கியுள்ளது.

- இந்த போர்டலின் மூலம் ஆன்லைனில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது மற்றும் குடியுரிமை வழங்கும் செயல்முறைகள் நடக்கும். 

- இதற்கு விண்ணப்பிக்கும் அகதிகள் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டைக் குறிப்பிட வேண்டும்.

- விண்ணப்பித்தவர்களிடம் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்று கூறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

- உள்துறை அமைச்சகம் விண்ணப்பத்தை பரிசீலித்து குடியுரிமை வழங்கும்.

மேலும் படிக்க | அமலானது சிஏஏ சட்டம்... அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News