உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!!

இரண்டு இடங்களுக்கான வாக்காளர் அட்டை உங்களிடம் உள்ளதா? ஆதார் உடன் இணைக்கப்பட்டவுடன், நீங்கள் ஒரே ஒரு வாக்கை மட்டுமே செலுத்த முடியும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 19, 2020, 02:03 PM IST
  • வாக்காளர் அட்டையை ஆதார் உடன் இணைக்க வேண்டும்
  • இரண்டு இடத்தில் வாக்காளர்கள் அட்டையை வைத்திருக்க முடியாது
  • ஒரு நபர் ஒரே இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும்
  • தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!! title=

புது டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை (Voter Card) ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த முன்மொழிவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி வாக்காளர் அட்டையை அடையாளம் கண்டு ரத்து செய்யலாம். புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு, அந்த பகுதிலேயே வாக்களிக்கும் உரிமையை வழங்குவதும் எளிதாக இருக்கும்.

வாக்காளர் அட்டை ஆதார் உடன் இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்?
உதாரணமாக, ஒரு நபர் தனது கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது. ஆனால் வேலைக்காரணமாக நீண்ட காலமாக நகரத்தில் வசித்து வருகிறார். அங்கும் அவர் தனது பெயரில் நகரத்தின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறார். தற்போது, ​​அந்த நபரின் பெயர் இரு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆனால் ஆதார் இணைக்கப்பட்டவுடன், ஒரே இடத்தில் ஒரு வாக்காளரின் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் கிடைக்கும். அதாவது, ஒரு நபர் ஒரே இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் அமைச்சர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு வாக்காளர் ஒரே இடத்தில் மட்டுமே வாக்களிக்கும் வகையில் தேர்தல் செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

40 தேர்தல் சீர்திருத்தங்கள் ஆய்வு:
தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளுக்கும் சட்ட செயலாளருக்கும் இடையிலான சந்திப்பில், தேர்தல் குழு சார்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை விரைவுபடுத்த சட்ட அமைச்சகத்தை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் 2004-05 க்கு முன்னர் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களும் விவாதிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட 40 தேர்தல் சீர்திருத்தங்களை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக சட்டச் செயலாளர் நாராயண் ராஜு வாக்களிப்பு குழுவுக்கு உறுதியளித்தார்.

வாக்காளர் அட்டையை 12 இலக்க ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசாங்கம் வேகமாக செயல்பட்டு வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய விரைவில் அமைச்சரவைக்கு குறிப்புக்கள் நகர்த்தப்படும்.

வாக்காளர்களின் விவரங்களை பல மட்டங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தல்கள்:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு முன்மொழிந்தது தெரிந்தது. வாக்காளர் அட்டைக்கு ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சட்ட அமைச்சகம் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, தரவை பல மட்டங்களில் பாதுகாக்கவும் உத்தரவிட்டது.

முன்னதாக, 2019 ஆகஸ்டில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைக்க தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியது. அதை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்றுக்கொண்டார். வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைப்பதற்கான சட்டபூர்வமான அடிப்படையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் அந்த திட்டத்தில் கூறியிருந்தது.

வாக்காளர் அட்டை பெற ஆதார் எண் கட்டாயமாக இருக்க வேண்டும்:
வாக்காளர் அட்டைகளை தயாரிப்பதற்கான புதிய மற்றும் பழைய அட்டைகளுக்கு இது பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. அதாவது, யாராவது புதிய வாக்காளர் அட்டையை வாங்க விரும்பினால், அவர் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். மேலும், யாராவது பழைய வாக்காளர் அட்டை வைத்திருந்தால், அவர்கள் அதை தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படும்.

போலி வாக்காளர்களைத் தடுப்பதற்கான ஒரே வழி:
ஒரே வாக்காளரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கும் சிக்கலைத் தீர்க்க, அதை ஆதார் உடன் இணைப்பதே ஒரே வழி என்று ஆணையம் வாதிடுகிறது. ஆணைக்குழுவின் இந்த வேண்டுகோளுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புக் கொண்டு, ஆதார் தரவு பல்வேறு மட்டங்களில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டத்தில், வாக்காளராக மாறுவதற்கு தகுதி பெறுவதற்கான வயது தொடர்பான விதிகளில் மாற்றத்தையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய அமைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் 18 வயதை எட்டியவர்கள் வாக்காளர்களாக மாறுவதற்கான உரிமையைப் பெறுகிறார்கள். வயது தொடர்பான தகுதிக்கு ஜனவரி 1 என்ற விதியை மாற்றி, அவர்களின் பிறந்த நாள் மூலம் தேதிகளை நிர்ணயிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பெண் இராணுவ ஊழியரின் கணவருக்கு சேவை வாக்காளர் அந்தஸ்து வழங்குவது குறித்து ஆலோசனை:
தேர்தல் சீர்திருத்த ஆணையத்தின் நிலுவையில் உள்ள 40 திட்டங்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு நினைவுபடுத்தினார். இந்த திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. ஆயுதப் படைகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் பணியாளர்களுக்கு பாலின அடிப்படையில் தேர்தல் விதிகளை ஒரே மாதிரியாக மாற்றும் திட்டம் இதில் அடங்கும்.

இதன் கீழ், பெண் இராணுவ வீரர்களின் கணவருக்கு சேவை வாக்காளர் அந்தஸ்தை வழங்குவதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் செய்வதற்கான நிலுவையில் உள்ள திட்டத்தை செயல்படுத்த ஆணையம் கோரியுள்ளது. தற்போதைய அமைப்பில், படைவீரர்களின் மனைவி சேவை வாக்காளர் அந்தஸ்தைப் பெறுகிறார். ஆனால் பெண் இராணுவ வீரர்களின் கணவருக்கு இந்த அந்தஸ்தை வழங்குவதற்கான விதி இல்லை.

முந்தைய மக்களவையில் நிறைவேற்றப்படாததால் இந்த சட்டத்தில் திருத்தம் தொடர்பான மசோதா காலாவதியானது. தற்போது மக்களவையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News