பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் குறைந்த செலவில் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு கடந்த ஜூன் 1, 2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகை ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் இலவச ரோமிங் முறை அமலுக்கு வந்ததால், தற்போது ஒரு சிம்கார்டு மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்களும், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேரும் பயனடைந்து வந்தனர்.தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல், இந்த திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இணைப்புக்குள் வந்துள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.