Tata Salt to Tata Motors - Ratan Tata Empire: இந்தியாவின் மூத்த தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவு செய்தி நள்ளிரவில் வெளியாகி பலரின் தூக்கத்தையும் தொலைக்கச் செய்துள்ளது. அவரின் இறப்பு செய்தி அனைவருக்கும் ஆற்ற முடியாத துயரத்தை உண்டாக்கியிருக்கிறது. உச்சாணிக்கொம்பில் இருக்கும் தொழிலதிபர் உயிரிழந்தது... ஏன் சாமானியர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதை நிச்சயம் ஒரு வரியில் சொல்லிவிட இயலாது.
இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது பரவி படர்ந்திருக்கும் 'டாடா' என்ற பிராண்டை உலகளாவிய நிறுவனமாக மாற்றியதால் மட்டுமா இத்தனை அன்பையும், நேசத்தை ரத்தன் பெற்றார்... நிச்சயம், இல்லவே இல்லை. எத்தகைய மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினாலும், அந்த சாம்ராஜ்யத்தில் சாமனியனுக்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவம்தான் அவர் மக்களிடையே இன்றளவும் கொண்டாடவைக்கிறது.
இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்களில் ரத்தன் டாடா முதன்மையானவர். அத்தகைய பெரிய இடத்தில் இருந்துகொண்டு சாமானிய மனிதனை ரத்தன் டாடா நினைத்து பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன என நீங்கள் யோசிக்கலாம், நீங்கள் கேள்வியும் எழுப்பலாம். அதற்கான விடையும், புரிதலும் ரத்தன் டாடாவின் வாழ்வை தெரிந்துகொள்வதன் மூலமே உங்களுக்கு கிடைக்கும்.
களத்தில் இருந்து தொடங்கிய ரத்தன் டாடா
1937ஆம் ஆண்டில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பெரும் தொழிலதிபரான ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன்தான் ரத்தன் டாடா. அவரது 10 வயதிலேயே அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். ரத்தன் டாடாவின் தாய்வழி பாட்டிதான் அவரை வளர்த்தெடுத்தார். அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை சார்ந்த பொறியியல் படிப்பை முடித்து டாடா குழுமத்தில் 1962ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளிகளுடன் தொழிலாளியை பணியாற்றினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின், 1971இல் டாடா குழுமத்தின் National Radio & Electronics Company Limited (NELCO) என்ற நுகர்வோர் மின்னணுவியல் பிரிவில் ரத்தன் டாடா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மிகவும் திணறி வந்த அந்த பிரிவை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் அவரின் தோள்களுக்கு வந்தது.
9 ஆண்டுகள் தொழிலாளர்களுடனும், கீழ்மட்ட பணியாளர்களுடனும் நெருங்கி பழகி ஒவ்வொரு படியாக முன்னேறிய பின்னர்தான் அந்த பொறுப்பு இயக்குநர் பதவியும் அவருக்கு கிடைத்தது என்பதை மறக்கக் கூடாது. கள யதார்த்தம் என்ன?, சாமானியனுக்கான தேவைகள் என்ன?, சாமானியனின் எண்ணவோட்டம் என்ன? என இந்தியர்களின் இதய துடிப்புடன் ஒன்றறக் கலந்து, மிக ஆழமாக உள்வாங்கியிருக்கிறார், ரத்தன் டாடா.
உச்சம் தொட்ட ரத்தன் டாடா
சுமார் 20 வருடங்களுக்கு பின் ஜேஆர்டி டாடாவிடம் இருந்து டாடா குழுமம், ரத்தன் டாடாவின் கைகளுக்கு 1991ஆம் ஆண்டு கைமாறுகிறது. அதன்பின் டாடா குழுமத்தின் தலைவராக 2012ஆம் ஆண்டு வரை நீடித்தார். அதன்பின்னரும், 2016, 17ஆம் ஆண்டுகளிலும் ரத்தன் டாடா தலைவராக இருந்தார். இந்த காலங்கட்டங்களில் ரத்தன் டாடா எண்ணற்ற சாதனைகளை செய்தார்.
இந்திய பொருளாதாரம் தாராளவாதத்தை நோக்கி காலடி எடுத்து வைத்த அதே காலகட்டத்தில்தான், 1991ஆம் ஆண்டில் ரத்தன் டாடாவும், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பை பெறுகிறார். டாடா குழுமத்தின் கட்டமைப்பை ரத்தன் டாடா ஒட்டுமொத்தமாக மாற்றி புது ரத்தம் பாய்ச்சினார். 2011-2012 ஆண்டுகளில் இவரின் தலைமையின் கீழ்தான் டாடா குழுமம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை பெற்று உச்சாணிக்கொம்பை தொட்டது. ஓய்வுக்கு பின்னரும் கூட மனிதச்செயல்பாடுகள், இந்தியாவின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் ஆகியவற்றில் ரத்தன் டாடா தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், இந்த சாதனைகள்தான் அவரை சாமானிய மக்களுக்கு நெருக்கமாக்கியதா...? இல்லை...
ரத்தன் டாடாவும்... சாமானியனின் கனவுகளும்...
இவை அனைத்தையும் விட சாமானியன் மீது கொண்ட அக்கறைதான் இவரை இன்னும் பெரிய உயரத்திற்கு அழைத்துச்சென்றத. மும்பை சாலை ஒன்றில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கனமழையில் நனைந்துகொண்டே பைக்கில் செல்வதை பார்த்த கணத்தில்தான், இதுபோன்ற இந்திய குடும்பங்களுக்காக நாம் எதையாவது செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கிறார், Tata Nano என்ற கனவு பிறக்கிறது. உலகிலேயே மிகவும் மலிவான கார் என விளம்பரப்படுத்தப்பட்டது, Tata Nano. இந்திய குடும்பங்களுக்காக அவர் பார்த்து பார்த்து வளர்த்த அந்த குழந்தை, டாடாவின் கனவை நிறைவேற்றவில்லை, அது பெரும் பின்னடவை சந்தித்தது.
அடுத்தகட்டமாக Tata Nano எலெக்ட்ரிக் காராக மாற்றி மலிவு விலையில் ஒரு EV கார் என்ற அந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என ரத்தன் டாடா ஆசைப்பட்டார். Tata Nano காரை வெற்றிகரமானதாக மாற்ற அவரின் கடைசி மூச்சுவரை சிந்தித்திருப்பார் என நம்பலாம். அந்தளவிற்கு Tata Nano காரை அவர் விரும்பினார். Tata Nano காருக்கு முன் Tata Indica காரும் மிடில் கிளாஸ் மக்களின் கனவுகளில் ஒன்றாக இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. அன்றாட வாழ்வில் சாமானியனின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய ரத்தன் டாடா செய்தவை கொஞ்சநஞ்சமல்ல... மனிதநேய செயல்பாடுகள்,2009 மும்பை தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்குஅவர் வழங்கிய நிவாரணங்கள், அறக்கட்டளைகள் மூலம் அவர் செய்த நற்பணிகள் என மக்கள் நலன் சார்ந்து ரத்தன் டாடா பல்வேறு தளங்களில் இயங்கியிருக்கிறார்.
கனவுகள் தொடரும்...
லாபத்தை மட்டும் பார்த்து தொழில் செய்தவர் அல்ல ரத்தன் டாடா, இந்திய மக்களுடன் அவர் கொண்டிருந்த உறவு அதையும் தாண்டியது. அதனால்தான் கோடிக்கணக்கான மக்கள் ரத்தன் டாடா மீது அளவற்ற நேசத்தை வைத்திருக்கிறார்கள்... வைத்திருப்பார்கள். இந்தியாவின் எதிர்காலம் குறித்து ரத்தன் டாடாவின் சிந்தனைகள் அளப்பரியது. சாமானியனை உயர்த்துவதன் மூலம் நாட்டையே வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லலாம் என்பது அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. கடைசி வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ரத்தன் டாடா, தனிமையை அதிகம் விரும்பி ஆவார். இப்போது அவர் இன்னும் பெருந்தனிமையை நோக்கி சென்றுவிட்டார் என்றாலும், அவர் விட்டுச்சென்ற கனவுகள் நிச்சயம் தனித்துவிடப்படக்கூடாதவை...
மேலும் படிக்க - விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்
மேலும் படிக்க - ரத்தன் டாடா வாழ்க்கையை பற்றிய 15 முக்கிய தகவல்கள், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
மேலும் படிக்க - Ratan Tata No More | மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ