அரசாங்கம் பொருளாதாரத்தை நன்றாகக் கையாளுகிறது; மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோதே நெருக்கடி தொடங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
IFM மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
சில அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். பாதகமான சூழ்நிலைகளில் கூட இந்திய பொருளாதாரத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட தொழிற்துறையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
தேசியப் பொருளாதாரத்தை மத்திய அரசு கையாளுவது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விமர்சித்ததை மத்திய நிதியமைச்சர் நிர்மலா திட்டவட்டமாக நிராகரித்தார், அரசாங்கத்திற்கு அதன் வேலை நன்கு தெரியும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்; இன்றைக்கும் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், மிகச்சிறப்பான, திறமையான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் இருக்கிறது’’ என்று கூறினார்.
#WATCH Finance Minister Nirmala Sitharaman in Washington DC, on India-USA trade deal: I hope to have an agreement sooner. I know the intensity with which negotiations are going on.Few issues on which there could be differences are being sorted out pic.twitter.com/hVglZn5iUo
— ANI (@ANI) October 18, 2019
காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்குவது தவிர்த்து, இந்த துறையின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளேன். இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் எதையும் தர இயலாது’ என்றார். இந்திய பொருளாதாரம், மந்த நிலையில் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தோம். அடுத்த பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்கவும் முடியாது. எனவே பிரச்சினைக்குரிய துறைகளில் இப்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்’’ என பதில் அளித்தார்.
ஒட்டுமொத்தமாக பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத்தக்க விதத்தில், உள்கட்டமைப்புக்கான செலவுகள் முன்னிறுத்தப்படும். பொதுமக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கிறபோது, பயன்பாடு அதிகரிக்கும். எனவேதான் கிராமங்களை சென்றடையும்படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.