முத்தலாக் எனப்படும் உடனடி விவாகரத்து மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளநிலையில் பாஜக MP-கள் தவறாமல் கலந்துகொள்ள உத்தரவு...
இஸ்லாமிய பெண்களை உடனடியாக மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்த மசோதா கடந்த 20 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஆனால், மசோதா மீதான விவாதத்தில் பங்குபெற விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். அதன்படி இன்று அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றம் வரவேண்டும் என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் என்பதும், நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற பாஜகவும், அதில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர எதிர்கட்சிகளும் முயன்று வருவதால் நாடாளுமன்றத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் இருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.