உயிரற்ற தாயை எழுப்பி.. பலரது உணர்வுகளை உலுக்கிப்போடும் குழந்தை!!

உயிரற்ற தாயின் உடலை உலுக்கி, பலரது உணர்வுகளை உலுக்கிப்போடும் ஒரு குழந்தையின் அவல நிலை.. கொரோனா, இன்னும் என்னென்ன கொடூரங்களைக் காட்டவுள்ளது?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2020, 02:09 PM IST
உயிரற்ற தாயை எழுப்பி.. பலரது உணர்வுகளை உலுக்கிப்போடும் குழந்தை!! title=

முஸஃபர்புர்: குஜராத்தின் அகமதாபாதிலிருந்து பீஹாரில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு புலம்பெயர்ந்த பெண் தொழிலாளி பாதி வழியிலேயே பயணத்தின் போது இரயிலில் இறந்தார். 35 வயதான அர்வினா கதூன் என்ற கதியாரைச் சேர்ந்த அப்பெண்மணி, கடந்த ஒரு வருட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். மே 25, திங்களன்று அவரது உடல்நிலை மதியம் 12 மணியளவில் மிக மோசமாகி, அவர் ரயிலிலேயே உயிர் இழந்தார்.

முஸஃபர்புர் ரயில் நிலையத்தில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பெண்மணியின் ஆண் குழந்தை, தனது தாயின் உடலின் அருகில் வந்து, அவரை எழுப்ப முயற்சிக்கிறது மற்றும் நிலைமையின் தீவிரம் தெரியாத அந்தக் குழந்தை, தாயின் சடலத்தின் அருகில் சுற்றித் திரிகிறார். இந்தக் காட்சியைக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி, அனைவரின் உள்ளங்களையும் பதற வைக்கிறது.

அந்தப் பெண் தனது சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் தன் இரண்டரை வயது மகனுடன் ஞாயிறன்று ரயிலில் பயணத்தைத் துவக்கினார். மதுபனி அருகில் ரயிலிலேயே அவர் உயிர் பிறிந்தது. ரயில், முஸஃபர்புர் ஜங்ஷனை மதியம் 3 மணி அளவில் அடைந்தபோது, ரயில்வே காவல்துறை, அவரது உடலை கீழே இறக்கி, ரயில்நிலையம் ப்ளாட்ஃபார்மில் வைத்தனர்.

ரயில் நிலையத்தில் தாய் மரணித்ததுகூட தெரியாமல், அவரை குழந்தை எழுப்பும் காட்சி கண்களைக் கலங்க வைக்கிறது. இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு யார் காரணம்? இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகளை மனதில் எழுகிறது. அதே கேள்வியுடன் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

இந்தச் சம்பவம் பற்றி கூறுகையில், ஜி.ஆர்.பி. துணை எஸ்.பி. ரமாகாந்த் உபாத்யாய், ‘சம்பவம் மே 25 அன்று நடந்தது. அப்பெண்மணி அகமதாபாதிலிருந்து வந்து கொண்டிருந்தார். மதுபனி அருகில் ரயிலிலேயே உயிர் இழந்தார். திடீரென அவர் உயிர் பிறிந்ததாக அவரது சகோதரியின் கணவர் கூறினார். உணவு, தண்ணீர் என எந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான குறையும் இல்லை. கடந்த ஒரு வருட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் மன நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறப்பு தொழிலாளர் ரயில்கள், 26 நாட்களில், 3543 ரயில் வண்டிகள் மூலம், 48 லட்சம் பேரை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது என ஒரு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

(மொழியாக்கம்: ஸ்ரீபிரியா சம்பத்குமார்) 

Trending News