இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், பிரச்சனைகளுக்கு போர் முடிவு ஆகாது, தீவிரவாதத்தை ஒழிக்க பேச்சுவார்த்தை நடத்துவோம் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த அதிரடி தாக்குதலில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் "பிரச்சனைகளுக்கு போர் முடிவு ஆகாது, தீவிரவாதத்தை ஒழிக்க பேச்சுவார்த்தை நடத்துவோம்" என தெரிவித்துள்ளார். மேலும் "இதுவரை உலகில் நடந்த அத்தனை போர்களும் தவறான கணிப்பில்தான் நடந்துள்ளன. போர்களை தொடங்கியவர்களால் அது எங்கே போய் முடியும்? என்பதை யூகிக்க தெரியவில்லை. எனவே, உங்களிடமும், எங்களிடமும் உள்ள ஆயுதங்களை வைத்துகொண்டு தவறான கணிப்புகளை நாம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை நான் இந்தியாவின் முன்வைக்கிறேன்" எனவும் இந்தியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால் அது தன்னுடைய கட்டுப்பாட்டிலோ, அல்லது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. பயங்கரவாதம் தொடர்பாக இந்திநா என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றாலும் அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.