பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "26/11 பயங்கரவாத தாக்குதலை" குறித்து மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா 26/11 தாக்குதல் மற்றும் அதன் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை என்றும் மறக்காது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாட்டின் பிரதமர் மோடி கூறியதாவது:
26/11 தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை என்றும் இந்தியா மறக்காது. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் என நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை கொடுக்கிறேன். பத்து வருடத்திற்கு முன்பு நடைபெற்ற 26/11 தாக்குதலின் போது காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தியது. மக்களின் மீது கவனம் இல்லை. இப்படிப்பட்ட அவர்கள் தான் நாட்டுபற்றை பற்றி பேசி வருகிறார்கள். என்னுடைய ஆட்சியில் நமது ராணுவம் பாகிஸ்தானில் நுழைந்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் காங்கிரஸ் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்புகிறது. சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தது குறித்து வீடியோ ஆதாரம் வேண்டும் எனக் கேட்கிறது.
தீவரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கையால், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிவர பயங்கரவாதிகள் அஞ்சுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் நமது வீரர்களை கொல்லும் மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் மாவோயிஸ்ட்டுக்கு புரியும் படி, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். அதேபோல தீவரவாததிகளுக்கும் பதிலடி கொடுத்தோம்.
இன்று "'அரசியலமைப்பு தினம்'. இந்திய ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் உரிமைகளுக்கான நாள். இன்றைய தினம் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு பெருமையான நாள். பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தின் பங்களிப்பு மகத்தானது. சமுதாயத்தில் உள்ள பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் வழி காட்டினார். ஆனால் காங்கிரஸ் கட்சி, "மோடியின் சாதி என்ன என்று கேட்கிறது" எனவும் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் இந்த முறை பாஜக அரசாங்கம் ஆட்சி அமைக்கும். புதிய வலிமை மற்றும் புதிய வேகத்துடன் வளர்ச்சியை நோக்கி பயணம் செய்வோம். ராஜஸ்தான் மக்கள் புதிய வரலாறு எழுதுவார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.