ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரசா மே தெரிவித்துள்ளார்!!
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, 1919 ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறி்ப்பாக சீக்கியர்கள் மீது, ஆங்கிலேயப் படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அந்த கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 1000 பேர் உயிரிழந்தனர்; 1500 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, இங்கிலாந்து வருத்தம் தெரிவித்தது.
இதில், 400-க்கும் மேற்பட்டோர் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஆங்கிலேய அரசு அறிவித்தது. ஆயினும், இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக, இந்திய தரப்பில் கூறப்பட்டது. இந்த படுகொலை சம்பவத்தின் நினைவாக, ஜாலியன்வாலா பாக்கில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இந்தியா வந்திருந்த, அப்போதைய பிரதமர் டேவிட் கேமருன், இந்த சம்பவம் வெட்கப்படக் கூடியது என்றாரே தவிர, இதற்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழந்து, 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பிரிட்டன் பார்லிமென்ட்டில் பேசிய, அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தம் தெரிவித்துள்ளார். அவரும், மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.