அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Oct 29, 2019, 11:49 AM IST
அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி: நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஆக்குவதற்கான உத்தரவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்க்கிழ)மை கையெழுத்திட்டார். அவர் நவம்பர் 18 ஆம் தேதி இந்திய தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்பார், மேலும் அவர் இந்த பதவியில் சுமார் 18 மாதங்கள் பணியாற்றுவார். தற்போதைய சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய்க்குப் பிறகு நீதிபதி பாப்டே மிகவும் மூத்த நீதிபதி ஆவார்.

63 வயதான நீதிபதி பாப்டே மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். மும்பை மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூரின் மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் பணியாற்றி உள்ளார். அவர் 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.

இவர் நாக்பூரைச் சேர்ந்தவர். நகரின் எஸ்.எஃப்.எஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவர் 1998 இல் ஒரு மூத்த வழக்கறிஞரானார். நீதிபதி போப்டே 2000 ஆம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அவருக்கு அளிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மத்திய அரசுக்கு நீதிபதி பாப்டேவை அடுத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

நீதிபதி கோகோய் இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாக இருந்தார், அவர் அக்டோபர் 3, 2018 அன்று பொறுப்பேற்றார். நவம்பர் 17 அன்று அவரின் பதவி காலம் நிறைவு பெறுகிறது. நீதிபதி பாப்டே ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சின் ஒரு நீதிபதியாக இருகிறார். அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.