புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வாரணாசி தொகுதியில் களம் காண்பதால், இன்று அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்பொழுது பி.ஜே.பி-யின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிஜேபி கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வெளியே வந்த பிரதமர் மோடி, "காசி மக்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறினார். காசி மக்கள் வழங்கிய அன்பிற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 12-15 மணிநேர சாலை பேரணி நடத்துவது காசி மக்களால் மட்டுமே செய்ய முடியும். நான் மக்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எங்கெல்லாம் இன்னும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதோ, அங்கெல்லாம் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடுவது என்பது கடமை. பெரிய எண்ணிக்கையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என வேண்டுகோள் வைத்தார்.
"மோடிஜி தான் வெற்றி பெற்று விட்டார். அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்" என்ற சூழலை இப்போது சிலர் உருவாக்கி விட்டார்கள், தயவு செய்து இதுபோன்ற சூழலில் யாரும் சிக்க வேண்டாம். ஓட்டு உங்கள் உரிமை. உங்கள் ஓட்டு தான் ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும். நாட்டை வலுவாக மாற்றுவதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.