Mamata vs CBI: உச்சநீதிமன்ற தீர்ப்பு "எங்களுக்கு தார்மீக வெற்றி" -மம்தா பானர்ஜி

போலீஸ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மூலம் எங்களுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2019, 01:15 PM IST
Mamata vs CBI: உச்சநீதிமன்ற தீர்ப்பு "எங்களுக்கு தார்மீக வெற்றி" -மம்தா பானர்ஜி title=

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து சிபிஐ மூலம் மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் எனக்கூறி மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இன்று மூன்றாவது நாளாக தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க ராஜீவ் குமாருக்கு உத்தரவிட கோரியும், சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் சிறை வைத்தது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவசர வழக்காக விசாரணை நடத்த கோரிய சிபிஐயின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிப்ரவரி 5 நாள் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொல்கத்தா கமிஷனர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுப்படி நடக்கும் விசாரணைக்கு கமிஷனரும், அரசும் கட்டுப்பட வேண்டும். அதேவேளையில் கமிஷனரை கைது செய்யக்கூடிய அளவிற்கு தேவையான ஆதாரங்கள் இல்லாததால், அவரை கைது செய்யக்கூடாது. ஆனால் கொல்கத்தா கமிஷனருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்படும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பை குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால் சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்படுவதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம். நீதிமன்றத்தையும், தன்னிச்சையான அமைப்பையும் நாங்கள் மதிக்கிறோம். கட்டுப்படுகிறோம். போலீஸ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மூலம் எங்களுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Trending News