புது டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
யாருக்கு எந்த இலாகா என்று நேற்று அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில், இன்று மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த மோதி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு, இந்த முறை நிதித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, தனது உடல் நிலை காரணமாக, புதிய அமைச்சரவையில் பங்கேற்க வில்லை. அவருக்கு பதிலாக நிதித்துறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.