புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்!

NGT on Holy Bath in Ganga : பாவத்தை போக்கும் கங்கையின் உச்சபட்ச சகிப்புத்தன்மையை கடந்த நீர்மாசு... குளிக்கத் தடை விதித்தது பசுமை தீர்ப்பாயம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 29, 2024, 12:52 PM IST
  • கங்கை நதியில் குளிக்கத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
  • பாவங்கள் போக்கும் கங்கையின் மாசு
  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிர்ச்சித் தகவல்கள்
புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்! title=

கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவங்கள் போக்கும் கங்கை என்று அறியப்படும் கங்கையில் குளிப்பது என்பது, நாட்டின் புண்ணிய நதிகளில் நீராடுவதை விட மேலானது என்ற காலம்காலமாக தொடரும் நம்பிக்கையை தகர்த்தெறியும் இந்த கோரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கங்கையில் குளித்தால் பாவங்கள் தீரும், காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என காசி கங்கை தொடர்பாக பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட நாட்டில், கங்கையில் குளிக்க வேண்டாம் என்று சொல்வது அதிர்ச்சியையே அளிக்கும். ஆனால், இதன் பின்னணியைத் தெரிந்துக் கொண்டால் பாவத்தை போக்கும் கங்கையின் உச்சபட்ச சகிப்புத்தன்மையை போக்கியது மக்களாகிய நாம் தான் என்பது புரியவரும்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை
ஆனால், மேற்கு வங்காளத்தில் உள்ள கங்கையின் முழுப் பகுதியிலும் அதிக மலக் கோலிஃபார்ம் இருப்பதால், கங்கை நீர், குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், தினசரி 258.67 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கங்கை நதியில் நேரடியாக கலப்பதை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், நதியில் உள்ள மாசுபாட்டைக் கையாள்வதில் முன்னேற்றம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கங்கை நதியும் அதன் துணை நதிகள் பாயும் மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் நதிகளின் மாசுபாட்டைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது தொடர்பான விவகாரங்களை என்ஜிடி விசாரித்து வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அதன் முந்தைய வழிகாட்டுதல்களின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மதிப்பிட்டு வந்தது.

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் அடுத்தடுத்து நல்ல செய்தி... சிபிஐக்கு தொகுதிகள் ஓகே - அடுத்தது என்ன?
 
வடக்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், நாடியா, மால்டா, ஹூக்ளி, புர்பா பர்தாமான், ஹவுரா, பூர்பா மேதினிபூர் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த அறிக்கைகளை என்ஜிடி தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.  

தினசரி உருவாகும் கழிவுநீரை சுத்திகரிக்க போதுமான வசதிகள் அமைக்கப்படவில்லை என்பதையும், கழிவுநீர் சுத்திகரிப்பில் 100 சதவீத இலக்கை அடைவதற்கான காலக்கெடு எதுவும் இல்லை என்பதும் வருத்தத்தற்குரியதாக இருக்கிறது என்று அமர்வு தெரிவித்தது.  

கடந்த வாரம் (பிப்ரவரி 21) தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு  அன்று பிறப்பித்த உத்தரவில், பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கூட இல்லை என்பது அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் திருப்திகரமாக இல்லை. நாளொன்றுக்கு 258.67 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மேற்கு வங்காள மாநிலத்தில் கங்கை நதியில் நேரடியாக ஓடுகிறது என்பதைக் காட்டுவது அதிர்ச்சியாக இருப்பதாக அமர்வு கூறுகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு

ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் கழிவுநீரை 100 சதவீத சுத்திகரிப்பு இலக்கை அடைவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என, நதியின் முக்கிய நீரோட்டம் பாயும் ஒன்பது மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் படிக்க | பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி

தங்கள் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலங்களை வரையறுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தவிர, தூய்மையான கங்கையை உருவாக்கும் தேசியத் திட்டத்தில் (NMCG: National Mission for Clean Ganga) பெறப்பட்ட நிதி எவ்வாறு எந்த அளவு பயன்படுத்தப்பட்டது, என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கழிவு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு மற்றும் ஆற்றில் ஏற்படும் மாசுபாட்டின் அளவு குறித்து செயல்திறன் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் கங்கை நதிக்கு மாசுபடுத்தும் பொருட்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், அடுத்த அறிக்கையில், போதுமான முன்னேற்றம் காட்டப்படவில்லை என்றால், சுற்றுச்சூழல் இழப்பீடு விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்ப்பாயம் கூறவிட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் எட்டு வாரங்களுக்குள் புதிய அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, மே 2 ம் தேதிக்கு விஷயத்தை ஒத்திவைத்தது.

மேலும் படிக்க | மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News