திமுக கூட்டணியில் பரபரப்பு... குட்டையை குழப்பும் மதிமுக - அடுத்தது என்ன?

DMK Alliance, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் கூட்டணியில் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சிபிஐயின் எம்.பி., சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 29, 2024, 11:44 AM IST
  • இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இருப்பினும், இறுதி தொகுதி உடன்படிக்கை இன்று கையெழுத்தாகவில்லை.
  • கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தற்போது கேட்டுள்ளோம் - சுப்புராயன்
திமுக கூட்டணியில் பரபரப்பு... குட்டையை குழப்பும் மதிமுக - அடுத்தது என்ன? title=

DMK Alliance, Lok Sabha Election 2024: மக்களவை பொதுத்தேர்தல் தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி மற்றும் அட்டவணை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மூன்றாவது முறை அரியணை ஏற பாஜகவும், மூன்றாவது தொடர் தோல்வியை தவிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளனர். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் மக்களவை பொதுத்தேர்தல் சார்ந்த பணிகளில் மும்முரமாக உள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களின் பரப்புரையை தற்போதே ஆரம்பித்துவிட்டன. பிரதமர் மோடி பாஜகவின் 'என் மண் என் மக்கள்' நடைபயண இறுதி விழாவுக்கு தமிழகம் வந்து, பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். 

இப்படி நாளுக்கு நாள் மக்களவை தேர்தல் குறித்த பரபரப்பு அதிகமாகி வரும் சூழலில், திமுக முகாமில் தொகுதி பங்கீடு என்பது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக தெரிகிறது. INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கி, திமுக அந்தந்த கட்சிகளுடன் இறுதி ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது. 

மேலும் படிக்க | மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி!

தொடர்ந்து, திமுகவின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. 

இதில், சிபிஐ தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தற்போதைய திருப்பூர் மக்களவை உறுப்பினரான சுப்புராயன் அண்ண அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், திமுக - சிபிஐ இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது என்றும் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற இரு தொகுதிகளையே (திருப்பூர், நாகப்பட்டினம்) கேட்டதாகவும் அவர் கூறினார். 

மேலும், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாக்கள் நிறைவடைந்த பின்னர், தொகுதி உடன்பாடு இறுதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சிபிஎம் சார்பிலும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிபிஎம் கட்சியின் சார்பில் சம்பத், சண்முகம், கனகராஜ், குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து, மதிமுக சார்பிலும் அடுத்ததாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, மதிமுக சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதன் அவைத்தலைவர் அர்ஜூன் ராஜ், "ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளதாகவும், மதிமுகவின் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என உறுதிப்பட கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, பேச்சுவார்த்தை தொடரும்" எனவும் அவர் தெரிவித்தார். 

திமுகவின் தொகுதி பங்கீடு குழுவின் தலைவராக டி.ஆர்.பாலு உள்ளார். மேலும், அந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடன் இன்று அல்லது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்து மார்ச் 2ஆம் தேதி தொகுதி உடன்பாடு இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News