புவி ஈர்ப்பு விசையை ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார் எனக் கூறி தான் தவறு செய்து விட்டதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்!
முன்னதாக செப்டம்பர் 12 அன்று செய்தியாளர் சந்திப்பில், பொருளாதாரம் குறித்து விவாதித்தபோது, ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணிதங்கள் ஒருபோதும் உதவவில்லை என தவறுதலாக தெரிவித்தார். டெல்லி சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் ரயில்வே அமைச்சர் தான் தவறு செய்ததாகக் கூறி, இதனை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு.. நானும் தவறு செய்துவிட்டேன்.. அவ்வாறே, நியூட்டனுக்குப் பதிலாக ஐன்ஸ்டீன் என சொன்னேன். அதே ஐன்ஸ்டீன், 'ஒருபோதும் தவறு செய்யாத ஒருவர், புதிதாக எதையும் முயற்சிக்காதவர் என்று கூறிவிடமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "நான் தவறு செய்துவிட்டு அதற்காக பயப்படுபவன் இல்லை, செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொள்பவன்". பலமுறை எனது தவறுகளை உணர்ந்து, தெளிவுபடுத்தியுள்ளேன்" என்றும் கோயல் தெரிவித்தார்.
முன்னதாக சம்பவத்தன்று பேசிய கோயல், ஐந்து ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பதன் அவசியம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை எட்டுவதை கணித பார்வையில் பார்க்கக்கூடாது. ஏனென்றால், புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை’ என கூறினார். கோயலின் இந்த கருத்தே தற்போது சர்ச்சைக்குறிய ஒன்றாய் மாறியுள்ளது.