லக்னோவில் பாதுகாப்பு எக்ஸ்போ 2020-வை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 5) லக்னோவில் பாதுகாப்பு எக்ஸ்போ 2020 (Defence Expo 2020) திறந்து வைக்கிறார். எக்ஸ்போவின் 11-வது பதிப்பு இன்று தொடங்கி பிப்ரவரி 9 வரை நடை பெரும். மதியம் 1.30 மணிக்கு மோடி இந்த இடத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன், மூன்று படைகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
இராணுவத்தின் நேரடி டெமோ மற்றும் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். பிரதமர் டெல்லிக்குத் திரும்புவதற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் எக்ஸ்போ இடத்தில் ஒரு சந்திப்பை நடத்துவார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மூத்த இராஜதந்திரிகள் மற்றும் பிற நாடுகளின் இராணுவத் தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளார்.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'இந்தியா: வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்' மற்றும் `டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆஃப் டிஃபென்ஸ்` என்பதில் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிகழ்வு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை கொண்டுவருவதாக உறுதியளிக்கிறது, அங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே மேடையில் காண்பிக்கும்.
இந்த ஆண்டு நிகழ்வில் 1028 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 135 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 70 நாடுகளின் பிரதிநிதிகள் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.