தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது.
இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீரா குமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக சார்பில் கனிமொழி எம்.பி, புதுச்சேரி முதல் - அமைச்சர் நாராயணசாமி, கர்நாடக முதல் - அமைச்சர் சித்தராமையா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Opposition Presidential candidate #MeiraKumar files her nomination pic.twitter.com/MGc1LJYmFo
— ANI (@ANI_news) June 28, 2017
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மீராகுமார், தனது பிரசாரத்தை குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார். நாளை மறுநாள் (வெள்ளிகிழமை) முதல் நாடு முழுவதும் தங்களுக்கு ஆதரவு கோரி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 23-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.