புகைப்படங்களை பகிர்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை உலகிற்கு தெரியப்படுத்தலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் "மன் கி பாத்" நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றினார்.
இன்று உரையாற்றிய மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்கள் மருத்துவரான மறைந்த ஜெயச்சந்திரனை பிரதமர் மோடி பாராட்டி பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...
சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் டாக்டர் ஜெயச்சந்திரன். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அவர் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார். அதேப்போல் 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார். இவர்கள் இருவரது இழப்பும் நாட்டிற்கு பெரும் இழப்பு ஆகும்.
நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பண்டிகைகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் புகைப்படங்களை பகிர்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை அனைவரும் காணமுடியும்.
நடப்பாண்டின் கடைசி மான் கி பாத் நிகழ்ச்சி இதுவென்பதால், நடப்பாண்டினை பற்றி பேசிய அவர் 2018-ஆம் ஆண்டில் தான் உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது என குறிப்பிட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 95% கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி பயணம் வரும் ஆண்டில் மேன்மேலும் தொடரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.