ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பெறுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!!
ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத்தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது. இதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் என ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டர் திருடி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.