ராபர்ட் வதோரா-விற்கு முன்ஜாமீன் அளித்தது டெல்லி CBI நீதிமன்றம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது!

Last Updated : Apr 1, 2019, 06:45 PM IST
ராபர்ட் வதோரா-விற்கு முன்ஜாமீன் அளித்தது டெல்லி CBI நீதிமன்றம்! title=

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து இருவரும் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. பின்னர், வழக்கின் தன்மைக்கு ஏற்ப இந்த இடைக்கால முன்ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டது. 

எனினும் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ஆம் தேதி பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜாமீன் பத்திரம் வழங்கி இருவரும் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜாமீன் காலத்தின் போது முன் அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Trending News