புதுடெல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் பல்வேறு இடங்களில் மத்திய அரசு ராணுவத்தை குவித்துள்ளது என்று குற்றம் சாட்டி அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று இரவு தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இது வழக்காமான நடவடிக்கைதான் என்று ராணுவம் விளக்கம் அளித்தும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி என்று குற்றம் சாட்டப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டானது அதிர்ச்சியளிக்கிறது மற்றும் காயப்படுத்தியது என்றார்.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு, ராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவித்து, விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையில் ராணுவத்தை இழுப்பது மிகவும் தவறானது, மம்தா பானர்ஜி அரசியல் விரக்தியில் உள்ளார் என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். மாநில அதிகாரிகள் சம்மதத்துடன் இதுபோன்ற சோதனை நடவடிக்கையானது பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது என்றார் மனோகர் பாரிக்கர்.