பீகார் +2 தேர்வில் 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய்(17) உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டியில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ்’என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் பாடம் என்றும், சமையல் கலை சம்பந்தப்பட்டது என்று தெரிவித்ததால் அவரின் தேர்வு அறிவு கேள்விக்கு உள்ளாக்கின. இதனையடுத்து தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகியது.
ரூபி ராய் போன்று கலை மற்றும் அறிவியல் பிரிவில் 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதியின்றி முதலிடம் பிடித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
13 மாணவர்களும் மறுதேர்வுக்கு ஆஜராகி முந்தைய தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரூபி ராய் மட்டும் மறுதேர்வுக்கு வராமல் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை பாட்னாவில் கல்வித் துறையின் சிறப்பு குழு முன்பாக மறுதேர்வுக்கு ரூபி ராய் ஆஜரானார். மறுதேர்வில் அவரின் தகுதியிழப்பை குழுவினர் உறுதி செய்ததை அடுத்து, ரூபி ராயை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றது.
ரூபியின் தந்தையார் தன்னுடைய மகளிடம் “தேர்வு முடிவை நான் பார்த்துக் கொள்கின்றேன்,” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருடைய தந்தை யாருக்காவது லஞ்சம் கொடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரூபி ராய் விசாரணை அதிகாரிகளிடம், “நான் தேர்ச்சி பெறவேண்டும் என்றுதான் விரும்பினேன், ஒருபோதும் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை,” என்று கூறியதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டு உள்ளது. ரூபியுடன் இவ்விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தனியார் நிர்வாகம் செல்லும் கல்லூரியின் உரிமையாளர் பச்சாராயும் கைது செய்யப்பட்டு உள்ளார். ரூபியின் தந்தை பச்சா ராயிக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறப்படுகிறது.