புதுடெல்லி: மெட்ரோவில் பெண்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் டெல்லி அரசின் திட்டத்தை குறித்து ஆம் ஆத்மி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி மெட்ரோ சேவையில் பெண்களுக்கு இலவச ஏன் வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுக்குறித்து நீதிபதி அருண் மிஸ்ரா கருத்து தெரிவிக்கையில், இதுபோன்ற நடவடிக்கையால் டெல்லி மெட்ரோ நிர்வாகம் நஷ்டத்தில் செல்லும் அபாயம் ஏற்படும். பொதுமக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற இலவச திட்டங்கள் மூலம் பணத்தை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது டி.எம்.ஆர்.சியின் வருவாயைப் பாதிக்கும் என்றும் இது லாபகரமான முயற்சியாக இருக்காது என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும் டெல்லி மெட்ரோவின் நான்காவது கட்டத்திற்கு தேவையான நிலத்தின் விலையில் 50 சதவீதத்தை டெல்லி அரசு ஏற்க வேண்டும் என்றும், சுமார் 600 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். அதாவது டெல்லியில் உள்ள பெண்கள் அனைவரும் மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த திட்டம் கொண்டுவர குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் ஆகும். பொது போக்குவரத்துகளில் பெண்கள் பயணம் செய்தால் பாதுகாப்பாக இருக்கும். மேலும் பல அரசு பேருந்துகளில் கேமார பொருத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் அனைத்து அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.
மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதன் மூலமாக டெல்லி அரசுக்கு தோராயமாக வருடத்திற்கு ரூ.700 கோடி செலவாகும். அந்த செலவை டெல்லி அரசு ஏற்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.