புதுடெல்லி: அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு, அதுல் பாபோ என்பவர் அனுப்பிய டிவிட்டர் செய்தியில், ‘‘கனடாவில் உள்ள அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி நிறத்தில் கால் மிதியடி விற்பனை செய்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பற்றி அறிந்த சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த நிறுவனம் இந்திய தேசிய கொடி நிறத்தில் உள்ள கால் மிதியடிகள் அனைத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமேசான் நிறுவனத்தினர் யாருக்கும் இந்திய விசா இனி கிடைக்காது. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட விசா அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுஷ்மா அறிவுறுத்தி உள்ளார்.