தெலங்கானா முதல்வர் ரேஸ்... மல்லு பாட்டி விக்ரமார்கா vs ரேவந்த் ரெட்டி - யார் இவர்?

Telangana Election 2023: தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற உள்ள நிலையில், மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோர் முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் உள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2023, 03:49 PM IST
  • ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் மாநில தலைவர் ஆவார்.
  • மல்லு பாட்டி விக்ரமார்கா கட்சியின் முக்கிய தலித் முகங்களில் ஒருவர்.
  • இவர்களை முதல்வராக நியமிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
தெலங்கானா முதல்வர் ரேஸ்... மல்லு பாட்டி விக்ரமார்கா vs ரேவந்த் ரெட்டி - யார் இவர்? title=

Telangana Election 2023: தெலங்கானா மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உதயமானது. ஒன்றிணைந்த ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த பகுதிகளுக்கு அன்றைய மக்களவை தேர்தலின்போதே சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

அந்த தேர்தலில், பிஆர்எஸ் (அப்போது டிஆர்எஸ்) 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளையும் கைப்பற்றியன. தொடர்ந்து, 2018இல் ஆட்சி தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே கலைக்கப்பட்டது. அப்போது 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் நடைபெற்ற நிலையில், பிஆர்எஸ் 88 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 7 தொகுதிகளையும் கைப்பற்றின. 

கடந்த 2019 மக்களவை தேர்தலில், பிஆர்எஸ் 9 தொகுதிகளையும், பாஜக 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் வென்றிருந்தன. இதன்மூலம், பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்த நிலையில், குடும்ப ஆட்சி, அனைத்து துறைகளிலும் நிரம்பி வழிந்த ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற பல புகார்கள் பிஆர்எஸ் கட்சியின் இன்றைய தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.

மேலும் படிக்க | Election Results: இப்ப சொல்லுங்க "பனோத்தி யார்?" காங்கிரசை சீண்டும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்

கேசிஆர் என்ற ஆளுமை தெலங்கானாவின் தோற்றத்திலும், அதன் தற்போதைய 9 ஆண்டுகால அரசியல் வரலாற்றிலும் பெரும் பங்கை வகிக்கும் நிலையில், காங்கிரஸின் இந்த வெற்றி மிக மிக முக்கியமானது. அந்த வகையில், காங்கிரஸ் தரப்பில் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதில், மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் உத்தம் ரெட்டி, காங்கிரஸ் முக்கிய தலைவர் மது யக்ஷி கவுட், தாமோதர் ராஜநரசிம்மா, முன்னாள் அமைச்சர் கே ஜனா ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். ஆனால், ரேவந்த் ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மல்லு பாட்டி விக்ரமார்கா

மல்லு பாட்டி விக்ரமார்காவும் முதலமைச்சர் ரேஸில் முதன்மையாக உள்ளார். அவர் மத்திரா தொகுதியில் நல்ல வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மல்லிகார்ஜுன் கார்கேவின் நெருங்கிய நம்பிக்கையாளரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவருமான பாட்டி விக்ரமார்கா, நீண்ட காலமாக காங்கிரஸ் விசுவாசியாக இருந்து வருகிறார். 

62 வயதான இவர், கட்சியின் முக்கிய தலித் முகங்களில் ஒருவர். பாரத் ஜோடோ யாத்திரையின் விரிவாக்கமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 36 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய யாத்திரையில் ஒன்றை இவர் மத்திராவில் இருந்து கம்மம் வரை நடத்தினார். தற்செயலாக, இந்த தேர்தலில் காங்கிரஸ் இந்த பகுதிகளில்தான் அதிக பலம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இவர் பதவியைப் பெற்றால், தெலுங்கானாவின் முதல் தலித் முதல்வராக இருப்பார், அவர் ஆட்சிக்கு வந்ததும் தலித் முதல்வராக நியமிப்பதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றத் தவறிய கே.சி.ஆருக்கு இது மேலும் ஒரு அடியாக அமையும். 

ரேவந்த் ரெட்டி

ரேவந்த் ரெட்டி ஒரு பெரும் பணியை முடித்து வைத்துள்ளார். 2018 சட்டமன்றத் தேர்தல்களிலும், அதைத் தொடர்ந்து நடந்த மாநகராட்சி மற்றும் இடைத் தேர்தல்களிலும் தெலுங்கானாவில் காங்கிரஸின் பெரும் தோல்விக்குப் பிறகு காங்கிரஸை மீட்டுள்ளார். 

தற்போது காமாரெட்டியில் கே.சந்திரசேகர் ராவ்விற்கு எதிராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கிறார், கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரேவந்த் 2017ஆம் ஆண்டில்தான் கட்சியில் சேர்ந்தார். அதுவரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக இருந்தார். நான்கு ஆண்டுகளில், மூத்த தலைவர் என். உத்தம் குமார் ரெட்டியிடம் இருந்து பதவியை பெற்று, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.

ரேவந்தின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர்களிடம் வரவேற்பில்லை. இவரின் அதிகாரமிக்க நிர்வாகப் பாணி, தேர்தல் வல்லுநர் சுனில் கனுகோலுவுடனான அவரது தொடர்பு மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் சாதமாக இருப்பது போன்றவை அவரின் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. 

மூத்த தலைவர்களான தசோஜு ஸ்ரவன் மற்றும் முனுகோட் எம்எல்ஏ கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி ஆகியோர் ரேவந் ரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகினர். ராஜ் கோபால் ரெட்டி மீண்டும் கட்சிக்கு வந்தாலும், அவர் உட்பட பல மூத்த தலைவர்கள் இன்னும் ரேவந்திடம் இருந்து விலகி இருக்கின்றனர். மூத்த தலைவர்களை விட்டுவிட்டு, கட்சி அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்குமா என்பது தெளிவாக இல்லை. 

மேலும் படிக்க | காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? - சனாதான சர்ச்சையும் வடஇந்திய பின்னடைவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News