மக்கள் ஜனநாயகக் கட்சியின் புல்வாமா மாவட்ட தலைவராக உள்ள அப்துல் ஞானி தார் இன்று பிற்பகலில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அப்துல் ஞானி தாரை தீவிரவாதிகள் ஏ.கே ரக துப்பாக்கியால் வெகு அருகில் இருந்து சுட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஞானி கொலை தொடர்பாக எந்த தீவிரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 17-ம் தேதி அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் முன்னணி தலைவர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு அரசியல் கொலை அரங்கேறியுள்ளது அம்மாநிலத்தை அதிர வைத்துள்ளது.
அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ள நிலையில் அவரது கட்சியின் பிரமுகர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது.