சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் போன்ற 7 விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகளின் சோதனை நடை முறையின் போது பாதுகாப்பு முத்திரை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விமான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடந்த வாரம் பங்கேற்றனர். இதில் விமானப் பயணிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடைமுறைகளை சற்று மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் போன்ற 7 விமான நிலையங்களில் இன்று முதல் முன்னோடித் திட்டமாக பயணிகளின் உடைமைகளை சோதிக்கும் நடைமுறையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பாதுகாப்புப் படையினரால் பரிசோதனை செய்யப்பட்ட சூட்கேஸ் மற்றும் பேக் போன்றவற்றில் "பாதுகாப்பு ஸ்டிக்கர்' ஒட்டப்பட மாட்டாது. விமானத்துக்குள் பயணிகள் எடுத்துச் செல்லும் கைப்பை, பேக்குகளில் சிறிய சீட்டை தொங்கவிட்டு அதில் பரிசோதித்ததற்கான முத்திரையிடும் நடைமுறையும் கைவிடப்படுகிறது. பயணிகளுக்கு நடைமுறை சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் 7 விமான நிலையங்களில் பேக்கேஜ் டேக் இணைக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது.