ஆந்திர மாநிலத்தில் ஆமைந்துள்ள திருமலை திருப்பதி கோயில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு பக்தர்களின் கூட்டம் அலை மோதும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இந்த கோயிலை திருமலை திருப்பதி (Tirupati) தேவஸ்தானம் நிர்வகித்து வருகின்றது. ஒய்.வி.சுப்பா ரெட்டி இந்த தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக உள்ளார். இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பா ரெட்டி தொடர்ந்து இரண்டாவது முறையாக அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் பல மாதங்களாக தாமதமாகி வந்த நிலையில், இறுதியாக, கடந்த மாதம் 24 பேரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்து ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்தது. இது தவிர, மேலும் 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
தேவஸ்தான வரலாற்றில் இந்த அளவிற்கு, 75-க்கும் மேற்பட்டோர் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது பல தரப்பிலிருந்து சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகளான பாஜக, தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அறங்காவலர் குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
ALSO READ: திருப்பதி தரிசனம் செய்ய IRCTC அளிக்கும் அற்புத வாய்ப்பு: புக்கிங் செய்யும் முறை இதோ
மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இந்த உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இவர்களை நியமனம் செய்தது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதது போல் உள்ளது என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். எனினும், பல தரப்புகளில் இருந்து பல வித எதிர்ப்புகள் வந்தபோதும், ஆந்திர மாநில அரசு இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 245-ஐ எதிர்த்து, வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 14 பேருக்கு குற்றப் பின்னணி உள்ளது என்றும், இவர்களில் 4 பேர் அரசியல் காரணங்களுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 18 பேரையும் எதிர் தரப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் அஸ்வினி குமார் கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 18 பேரையும் எதிர் தரப்பினர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். எனினும், நீதிபதிகளின் உத்தரவுக்கு தேவஸ்தானத்தின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, எதிர் தரப்பினர்களாக சேர்க்க நோட்டீஸ் அனுப்பும் விவகாரத்திற்கும், தேவஸ்தானத்திற்கும் தொடர்பில்லை என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேருக்கும் எதிர்ப்பு இருந்தால், அவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை (Court) நாடலாம் என்றும் அதிரடியான உத்தரவை அளித்தார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர்கள் நியமனம் முதல் தொடங்கி இந்த அறங்காவலர் குழு தொடர்பான விவகாரம் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ALSO READ: kuberan: பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR