உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
காஷ்மீர் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூர் பகுதியில் பதுங்கிருந்த, ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும், காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் புல்வாமா பகுதியைச் சேர்ந்த அகிப் என்பது தெரியவந்தது.