மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து பாஜக விலகியது. இதனால் மக்கள் ஜனநாயக கட்சியிடம் (பிடிபி) பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை இழந்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க, தங்கள் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி, அவர்களின் ஆதரவுடம் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது என பிடிபி கட்சி குற்றம்சாட்டியது. பாஜகவின் ஆட்சி அமைக்கும் முயற்ச்சியை தடுக்கும் நோக்கத்தில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 44 தொகுதிகள் வேண்டும். ஆனால் ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. அதிகபட்சமாக பிடிபி கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், என்.சி. கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 12 எம்எல்ஏக்களும், மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரு எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சையாக 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இதில் பாஜகவின் 25 எம்.எல்.ஏ.க்களும், மக்கள் மாநாட்டுக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்ச்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு இன்னும் குறைந்தது 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
அதேவேளையில் பிடிபி-யின் 29 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியின் 12 எம்எல்ஏக்களும், என்.சி கட்சியின் 15 எம்எல்ஏக்களும் என மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணியில் மொத்தம் 56 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இருப்பதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் சத்யபால் மாலிக் வாய்ப்பளிக்க வேண்டும் உரிமை கோரி கடிதம் அனுப்பட்டது.
அதேபோல மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோனேயும், ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் எனது கட்சியின் 2 எம்எல்ஏக்கள், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் மற்றும் 18-க்கும் மேற்பட்ட மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரினார். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரபரபப்பு ஏற்ப்பட்டது.
அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்கபட்ட நிலையில், நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அரசியலமைப்பு சட்ட பிரிவுகளுக்கு உள்பட்டு, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையை கலைத்து உத்தரவிட்டார்.