கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 14_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும், மூன்றாவது போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. இதனால் ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும், மூன்றாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மும்பை இந்தியன்ஸ் 13 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றியையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை அனைத்து வகையான டி-20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். இந்த சாதனையை 2015-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிகழ்த்தியது.
இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேவேளையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களம் இறங்கக்கூடும். எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
PREVIEW: Defending champions #MumbaiIndians will be desperate to open their account in #VIVOIPL 2018 when they take on the #RCB in Match 14 - by @statanalyst
READ: https://t.co/J1Il8yDvP7 #MIvRCB #VIVOIPL pic.twitter.com/68KDHWHTwy
— IndianPremierLeague (@IPL) April 17, 2018