இந்தியாவின் ஜென் நிலையும், கொ.மு., கொ.பி கால கட்டமும்...!

உலகளவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் சீனாவின் தயாரிப்பா?... உண்மை என்ன..? 

Written by - Vanathi Giriraj | Last Updated : Mar 25, 2020, 01:47 PM IST
இந்தியாவின் ஜென் நிலையும், கொ.மு., கொ.பி கால கட்டமும்...! title=

உலகளவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் சீனாவின் தயாரிப்பா?... உண்மை என்ன..? 

 இன்று முதல் இந்தியா முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது.. எல்லோரும் அமைதியாக அவரவர் வீட்டிலேயே   இருக்க வேண்டும். ஏன் இந்த ஜென் நிலை? எல்லாம் சீனக்  கொரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இந்த ஜென் நிலையில் இருக்குமாறு பிரதமர் கூறிவிட்டார்.

கொரோனா சீன தயாரிப்பாக இருக்கலாம். சீனாவின்  பொறுப்பின்மையின் விளைவாக இருக்கலாம், அல்லது கனடாவின் பரிசோதனை மையத்திலிருந்து சீனாவால் திருடப்பட்டு வுகான் பரிசோதனை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கவனக் குறைவால் பரவியதாகவும் இருக்கலாம். இத்தனை "இருக்கலாம்"களுக்கு  மத்தியில் அது  உலகில் இருக்கிறது. அது அப்படி இருக்கலாமா? இருக்க விடலாமா? கூடாது.

எனவேதான் நமது பிரதமர் மோடி அவர்கள் சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை  நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆம், முழு  ஊரடங்கு உத்தரவு, அது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது. இதற்கு பலன் நிச்சயம் இருக்கும். கொரோனா எங்கு கட்டுப் படுகிறதோ இல்லையோ இந்திய மண்ணில் இருந்து ஒழிந்து போக வேண்டும். 

 அது ஒரு புறம் இருந்தாலும்  கொரோனாவால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகம் என்றால் உலக மக்கள் என்று நம்மை நினைத்தே பழகி விட்டது அல்லவா?, அப்படி இல்லை. இந்த  உலகம் என்பது  நாம் மட்டுமல்ல. ஊர்வன, பறப்பன, நடப்பன மற்றும் நீந்துவன எல்லாம் வாழும் ஓரிடம்தானே உலகம்?. இது தவிர, மரம் செடி கொடிகள், நீர் நிலைகள், மலை, காற்று, மண் இன்னும் பிற எல்லாமும் இருக்கும் இடம்தானே  உலகம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர்  இறந்த நிலையில் சீனா நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நான்கு வாரங்கள்   முற்றிலுமாக  ஊரடங்கு உத்தரவு போடப்பட்து. பிறகு நோய்  பரவுவது கட்டுப்படுத்தப் பட்டது.  

அதில் சீனாவுக்கு மட்டும் நன்மை இல்லை. உலகத்திற்கே நன்மை. அதனால் நாசாவின் செயற்கை கோள்  படத்தில்  சீனா  மாசு பாடின்றி துல்லியமாக தெரிந்துள்ளது. காற்று சுத்தமாகி விட்டது. காற்றில் கார்பன் டை  ஆக்சைட் மாசு  25%  குறைந்து விட்டது. இதைத் தொடர்ந்து  பல நாடுகளும் ஊரடங்கில் ஈடுபட்டபோது என்ன நடந்தது? சில நாடுகளில் மனிதர்கள் அடங்காமல் ஆட்டம் போட்டார்கள். அதனால், ஏராளமான உயிரிழப்புகள். ஆனால் சில நன்மைகள் உலகுக்கு.

கொரோனாவிற்கு முன்னர் - வெனிஸ் நகரம் ஏராளமான  சுற்றுலா பயணிகள் வருகையால் அழுக்கடைந்த நீருடன் மேலோட்டமான அழகுடன் இருந்தது. வெனிஸ் நதிகளில் மீன்களே  இல்லாத நிலையும்  இருந்தது. கொரோனாவிற்கு பின்னர் -  இப்போது ஊரடங்கி அமைதியான பிறகு நதி நீர் தெள்ளத்  தெளிவான பளிங்கு நீர் போல மாறி வருகிறது. அதில் புதிதாக மீன்கள் நீந்தி விளையாடுகின்றன.
 
இத்தாலியில்  உயிர் பலி அதிகம்தான். ஆனால் ஊரடங்கி இருப்பதில் காற்று சுத்தமாகி விட்டது. இது தவிர டால்பின்களை வைத்தது நடத்தப்படும் வேடிக்கை நிகழ்ச்சிகளில் டால்பின்கள், முத்தம் கொடுப்பது, சாகசம் செய்வது, போன்ற கட்டளைகளை தொடர்ச்சியாக பல மணி நேரம் செய்ய வேண்டி இருக்கும். அதனால், அவைகள் மனசோர்வுக்கு ஆளாவதுடன், சற்று கோபமான மன நிலைக்கும் தள்ளப் படும். ஆனால் அவை இப்போது  மனிதர்கள் முகத்தில் விழிக்காமல் அவை ஆனந்தமாக துள்ளி விளையாடி ஓய்வில் இருக்கின்றன.

பொதுவாக உலகமெங்கும் இது போன்ற சமயங்களில் காற்று  மாசு பாடு  குறைந்தது மட்டுமல்லாமல், வாகனங்கள்  இயங்காததால் ஒலி  மாசுபடும் குறைந்துள்ளது. மனிதனை தாண்டி மற்ற இயற்கை வடிவங்களை காப்பாற்ற இப்படி ஒரு வைரஸ் கிளம்பியதா?
கொரோனாவிற்கு முன்னும் பின்னும் உலகில் மாற்றம் வந்துள்ளது.

அதெல்லாம் சரிதான்.  இந்தியாவில்  கொரொனாவின்  ஆட்டம்  இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. நம் நிலைமை என்ன? இந்த கட்டுரை எழுதிய நானும் இதை வாசிக்கும் நீங்களும் 21 நாட்கள் கழித்தும் அதன் பிறகும் இருக்கவேண்டுமே.  ஆம் எல்லோரும்  இருக்க வேண்டும் , இந்தியர் எல்லோரும்  இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி அவர்கள் இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவை சரியான நேரத்தில் அறிவித்திருக்கிறார்.  மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டு நம் இந்தியாவில் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாக இருக்கலாம்.  

நாளை நல்லதே நடக்கும் என்று நம்புவோம். மரண பயம் வரும்போது  எல்லோரும்  திருந்தி விடுவதாக  நமது சினிமாக்கள் சொல்லி வந்தது போல... இந்த கால கட்டத்தில்  நிறைய பேரின் மனதில் மாற்றம் வந்திருக்குமா?. கொரோனாவிற்கு முன் இருந்த மாசடைந்து இருந்த மனங்கள் கொரானாவிற்கு பின்னர் (பிழைத்து இருந்தால் ) தெளிவடையுமா?. 

கொ.மு., கொ.பி. காலம் எப்படி இருக்கும் என்னும் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

Trending News