முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக பிறந்தவர் நம் அக்னி நாயகன் அப்துல் கலாம். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கினார்.
இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.
கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.
இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
2015-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் நாள் "அருமை மாணவர்களே" என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.
2011-ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இன்று அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் நாடு முழுவதும் அனைவராலும் அனுசரிக்கப்பட்டு நினைவுகூறப்படுகிறது.