தனது வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் செல்பி சரிபார்ப்பு அம்சத்தை உபெர் நீட்டிக்கிறது..!
மே மாதத்தில் ஓட்டுநர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட செல்ஃபி முறை ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதைச் சரிபார்க்க உலகளவில் உதவியதாக உபெர் டெக்னாலஜிஸ் நிறுவனம் (Uber Technologies Inc) தெரிவித்துள்ளது. மே 18 அன்று உபெர் தனது “நோ மாஸ்க் நோ ரைடு” (No Mask No Ride) கொள்கையை அறிமுகப்படுத்தியது மற்றும் நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோயால் இந்த கொள்கையைக் காலவரையின்றி நீட்டிக்கவும் செய்தது.
இப்போது, இந்தத் திட்டத்தின் அடுத்தப் பகுதியாக ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்ஸ் இருவரும் சவாரி செய்யும் போது எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஓட்டுநர்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் முகமூடியுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும், அதே நேரத்தில் ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்ஸ் மற்றவர் முகமூடி அணியவில்லை என்று புகாரளித்தால் அபராதம் இல்லாமல் பயணத்தை ரத்து செய்ய முடியும். இந்த விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கணக்குச் செயலிழக்க நேரிடும் என்றும் உபெர் தெரிவித்துள்ளது.
ALSO READ | பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!!
ரைடர் செல்பி அம்சம் செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் கனடாவிலும், அதன் பின்னர் லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களிலும் அமல்படுத்தப்படும் என்று உபெர் தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களைப் போலல்லாமல், ரைடர் பயன்பாடு ஒரு பயணி முகக்கவசம் அணியவில்லை என்று ஒரு டிரைவர் தெரிவித்தால் மட்டுமே செல்ஃபி எடுக்கும்படி கேட்கும்.
தொற்றுநோய்களின் போது, குறிப்பாக உபெரின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் வாடகை-சவாரி பயணங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. மே மாதத்தில் இருந்து அனைத்து உபெர் பயணங்களில் கிட்டத்தட்ட 99.5% ஓட்டுநர் அல்லது பயணி முகக்கவசம் அணியவில்லை என்ற புகார்கள் இல்லாமல் முடிந்துள்ளதாக உபெர் தெரிவித்துள்ளது.
செல்ஃபி அம்சம் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாது, ஆனால் முகமூடியை முகத்தில் ஒரு பொருளாகக் கண்டறிகிறது. சாத்தியமான சில சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உபெர் 96 மணி நேரம் வரை செல்ஃபி புகைப்படங்களைச் சேமித்து வைக்கிறது, அதற்கு பின்னர் அவற்றை நிரந்தரமாக நீக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.