உலக சிட்டுக்குருவி தினம்! சுற்றுச்சூழலை மேம்படுத்தி பறவையினத்தை பாதுகாப்போம்!

பறவையினத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20ஆம் நாளை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.   

Written by - Amarvannan R | Last Updated : Mar 21, 2023, 08:33 AM IST
  • பறவைகளுக்கு தானியங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
  • உப்பும் என்னையும் மிகுந்த உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.
உலக சிட்டுக்குருவி தினம்! சுற்றுச்சூழலை மேம்படுத்தி பறவையினத்தை பாதுகாப்போம்! title=

"சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு; தென்றலே உனக்கேது சொந்த வீடு; உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு" என்ற சிட்டுக்குருவியின் வாழ்வியல் சூழலை  எதார்த்தமாக எடுத்துரைத்த கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப,  மனிதனின் உதவியுடன் உலகம் முழுக்க பரவிய பறவை ஒன்று உண்டெனில் அது சிட்டுக்குருவிதான். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள்தான் சிட்டுக்குருவிகளின் தாயகமாக கருதப்படுகிறது. மனித இனம் வாழும் இடமெல்லாம் அதாவது துருவப் பகுதிகளை தவிர்த்து, அனைத்து நிலப்பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கே தார் பாலைவனம் வரை இந்திய துணை கண்டம் எங்கும் சிட்டுக்குருவிகள் பரவி உள்ளன.  இதற்கு முக்கிய காரணம் மனிதரை அண்டி வாழும் பண்பு சிட்டுக்குருவிகளுக்கு உண்டு.  இமயமலையில்கூட 4000 மீட்டர் உயரம்வரை சிட்டுக்குருவிகள் இருக்கின்றனவாம். உலகில் எங்காவது ஒரு புதிய நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டால் ; அங்கு ஏற்றுமதியாகும் முதல் பறவை சிட்டுக்குருவியாகதான் இருக்கும் என்கிறார்கள் பறவையியலாளர்கள்.

குருவிகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் கம்பிவால் சிட்டுக் குடும்பம், தேன் சிட்டுக் குடும்பம், தூக்கணாங்குருவி குடும்பம், பாக்குச் சிட்டுக் குடும்பம், வாலாட்டிச் சிட்டுக்குடும்பம், வானம்பாடி குடும்பம், அடைக்கலாங் குருவி, மொட்டைவால் குருவி என பல வகை உண்டு.  ஆயினும், அவற்றில் சிட்டுக்குருவியானது மனிதனோடு மனிதனாகப் பின்னிப் பிணைந்து குடும்பத்தில் ஒருவராக ஒன்றி வாழக்கூடிய செல்லப் பறவையாகும். கடந்த 20ஆண்டுகளுக்கு முன் கிராமம் மற்றும் நகர்புறங்களில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் சிட்டுக்குருவிகளோடு நட்பு கொண்டவர்களாக இருந்தனர். அந்தளவிற்கு ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களிடமும் குடும்ப உறுப்பினர்களாகி பாசம் காட்டி வலம் வந்தன சிட்டுக்குருவிகள்.  அந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு அறிமுகமான முதல் பறவை சிட்டுக்குருவியாகதான் இருந்திருக்கும். மேலும், பெரும்பாலோரின் இளம் வயது ஞாபகங்களில் சிட்டுக்குருவிக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. மலரும் நினைவுகளும் அவற்றை உறுதிப்படுத்தும். ஏனெனில், அந்தளவிற்கு சிட்டுக்குருவியானது மனிதர்களோடு மிக நெருக்கமாக பழகி வந்தன.  அதிலும், ஓரிடம் பாதுகாப்பாக இருக்கிறது என்றால்,  அவ்விடத்தில் உரிமையுடன் கூடுகட்ட தொடங்கிவிடும். 

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி... குறைந்தபட்ச கடனாவது தாங்க... கையேந்தும் பாகிஸ்தான்!

மனிதர்களோடு மிக நெருக்கமாக நட்பு கொண்டிருந்த சிட்டுக்குருவியானது; நமது பண்பாட்டின் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது!  சிட்டுக்குருவிகளுக்கு பேச தெரியும் பொய் சொல்ல தெரியாது என்ற பாரதிக்கும் சிட்டுக்குருவிக்கும்  உள்ள நெருக்கத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.  . ஏனெனில், தனது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த நிலையிலும்; வீட்டிலுள்ளோர் பசியாறுவதற்காக பாரதியின் துணைவியார் செல்லம்மா பக்கத்து வீட்டில் கடன்வாங்கி சமைக்க வைத்திருந்த கொஞ்சநஞ்ச அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக்குருவிகளுக்கு  எடுத்துப்போட்டுவிட்டு, தன் பசியையும் குடும்பத்தாரின் பசியையும் மறந்தநிலையில், சிட்டுக்குருவிகள் பசியாறும் அழகை புன்முறுவலுடன் கண்டுகளித்தவர் பாரதி. அந்தளவிற்கு மனிதனுக்கும் சிட்டுக்குருவிக்குமான நெருக்கமும் - பந்தமும் - பாசமும் எல்லை கடந்துநின்றன. 

மேலும் மனிதனுக்குள் இருக்கும் காதலாகட்டும் ; சோகமாகட்டும் ; இன்பம் - துன்பம் எதுவாகிலும் அவற்றைக் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கப்படும் சிட்டுக்குருவிகளோடு பகிர்ந்துகொண்டு ஆறுதலை தேடுவதுண்டு.  இந்நிலையில், மனிதனுக்கும் சிட்டுக்குருவிக்கும் இடையேயான எல்லையற்ற பாசப் பிணைப்பை வெள்ளித்திரையில் தமிழ்த் திரைப்பட  இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் இடம்பெற செய்து, மிக அழகுற காட்சிப்படுத்தினர். அதற்கேற்ப, பாடலாசிரியர்களும் உயிரோட்டமான பாடல் வரிகளை உணர்வுபூர்வமாக உட்புகுத்தினர்.  அவற்றிலுள்ள அனுபவங்களை நாமும் அறிந்துகொள்வோம்.  அன்றைய தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.சோமு நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.  நண்பரோ வீட்டில் இல்லை.  ஆனால்,  நண்பரின் துணைவியாரோ வீட்டிலுள்ள சிட்டுக்குருவிகளிடம்  பேசிக்கொண்டிருந்தாராம். அதற்கு சிட்டுக்குருவிகளும் அதன் பாஷையில் பதிலளித்துக் கொண்டிருந்ததாம். அவற்றை உற்றுக் கவனித்த இயக்குனர், "சிட்டுக்குருவிகளிடம் என்ன பேசினீர்கள்" என நண்பரின் துணைவியாரிடம் கேட்க, அதற்கு அவரோ, "வெளியே சென்ற என் கணவர் எப்ப வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு  எனக்கு மட்டுமல்ல ; எங்கள் வீட்டு சிட்டுக்குருவிகளுக்கும் உண்டு" என்றாராம். 

மேலும் படிக்க | 5 நாள்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்... எப்படி தெரியுமா?

அதனைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுபோன கே. சோமு, அவற்றைத் தான் இயக்கிய, 'டவுன் பஸ்' என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்த விரும்பினாராம். அதற்காக பாடலாசிரியரும் கவிஞருமான கா.மு.ஷெரீப்பிடம் அவற்றை பாடலாக்கி தருமாறு கூறினாராம். கவிஞரோ,  "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே" என்ற  உள்ளன்புமிக்க பாசமிகு பாடலை கற்பனை நயதோடு இயற்றிவிட்டாராம். அப்பாடல் இயக்குனருக்கு மிகவும் பிடித்துப்போகவே, அவற்றை அத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தி விட்டாராம்.  அது மட்டுமின்றி ; அப்பாடல் காட்சியானது - தொடங்குவதற்குமுன் , அப்படத்தில் நடித்த அஞ்சலிதேவி சிட்டுக்குருவிகளிடம் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.   வரவேற்புக்குரிய அந்த  வசனங்களை இதோ உங்களுக்கு விருந்தாகப் படைக்கிறோம், "என்னடா ராஜா...நீங்களெல்லாம் இப்படி சத்தம் போடுறீங்க. சொல்ல மாட்டீங்களா. சொல்லுங்கடா. நீங்க சொல்லலனா உங்களோட நான் பேசமாட்டேன். டுடு.. டுடு.. ஓ...அய்யா இன்னும் ஏன் வரலன்னு கேட்குறீங்களா. வந்திடுவார். ஆங். நான் உங்களுக்கு ஒரு சேதி சொல்லட்டுமா என தொடங்கும் அப்பாடலை , இன்று கேட்டாலும் மனது மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும். ; அங்கமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.

மேலும், 'புதிய பறவை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே... செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே" என்ற பாடல் வரியில்  சிட்டுக்குருவி அதன் இனசேர்க்கைக்கு தயாராகிவிட்டது. நாம வாழ்க்கையில் எப்ப ஒண்ணு சேரபோறோம் ; நம்ம திருமணம் எப்போது? என அப்படத்தின் கதாநாயகியான சரோஜாதேவி, கதாநாயகனான சிவாஜியிடம் வைக்கும் அன்பு வேண்டுகோளை அழகுற சொல்லுவதற்கு அப்பாடலில் சிட்டுக்குருவியைத்தான் முன்னிலைப்படுத்தியிருப்பார் ; கவியரசு கண்ணதாசன். சிட்டுக்குருவி மனிதனோடு மனிதனாகப் பின்னிப் பிணைந்து நட்புறவுக் கொண்டது என்பதை பறைசாற்றும் வகையில்  திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களிலும் சிட்டுக்குருவிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம்.

பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் சிட்டுக்குருவியை மையமாக வைத்து நிறைய பாடல்கள் இயற்றப்பட்டது.  அப்பாடலின் தாக்கத்தால், சிட்டுக்குருவியானது ரசிகர்கள் (மக்கள்) மனதில் நிரந்தரமாக கூடுகட்டி குடியேறிவிட்டது.  சிட்டுக்குருவியின் உருவமைப்பு மிக அழகாகயிருக்கும். அதன் அலகு நுனி முதல் வால்வரை சுமார் அரை அடி அளவுகோல் (ஸ்கேல்) நீளத்துடன் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண்- பெண் நிற வேற்றுமையை நேரில் பார்த்தவுடன் உணரலாம். ஆண் பறவைகளுக்கு தொண்டை பகுதியில் கருப்பு நிறமும் அடர் பழுப்பு நிற உடலையும் கொண்டிருக்கும். பெண் பறவைகள் சற்று மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறிதாக இருந்தாலும்கூட பெரிய இறக்கைகள் சற்று பெரிய வால் காரணமாக நன்றாகவும் வேகமாகவும் பறக்க கூடியவை. இந்நிலையில் குருவியை முன் உதாரணப்படுத்திதான், 'சிட்டாய் பறந்து விட்டான்' என்ற பழமொழியும் உருவாயிற்று.

"ட்சி, ட்சி, ட்சிஞ் ச்சீர் ச்சீர் ச்சீர்ன்னே" குரல் கொடுக்கும் சிட்டுக்குருவிகள் கூட்டங்கூட்டமாகத் திரியும் பண்பு கொண்டவை.  பொதுவாகவே, சிட்டுக்குருவியானது தனது இனசேர்க்கைக்குமுன் கூட்டைதான் முதலில் கட்டும்.  சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. அதனால் தான் , வீடுகளில் குருவிகூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.  அது மட்டுமின்றி ; கிராமப்புறங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடைக்குமுன்பே அறுத்துவந்து தங்கள் வீடுகளிலுள்ள முன்புற தலைவாசல் நிலை, விட்டம் மற்றும் உத்திரம் ஆகியவற்றில் கட்டி தொங்கவிடுவார்கள். குருவிகளானது அவ்வப்போது கூட்டங்கூட்டமாக வந்து அந்த நெற்கதிர்களை தன் அலகால் கொத்தி தின்று பசியாறும்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

பெரும்பாலும் இளவேனிற் காலத்தில்தான் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட தொடங்கும். பொந்து, வீட்டு முகடுகளின் சந்து, பரண், விட்டம், மாடம், வீட்டுக் கூரை, ஏணிபடியின் பின்பகுதி, புகைப்படங்களின் பின்புறம்,  ஓடுகளின் இடுக்குகள், கிணற்றுகளின் இடுக்குகள், மழை நீர் வழியும் குழாய்கள் போன்ற வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் புல், வைக்கோல், கந்தை பஞ்சு, மென்மயிர், இறகு என்று எளிதில் கிடைக்கும் பொருள்களால் உட்புறம் குழுவாக இருக்கும் ஒருகூட்டை குருவிகள் அமைக்கும். நகர் பகுதிகளில் பழைய கட்டடங்கள், ஓடுகளின் இடுக்கில், தகரம் பதிக்கப்பட்ட கட்டடங்கள், கூரை வீடுகள் போன்ற இடங்களில்தான் அதிகமாக கூடும் கட்டும்.

மேலும், மற்ற பறவைகள்போல் அல்லாமல், தட்பவெப்ப சூழல் உகந்ததாக இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.  பிற பறவையினங்களைப் போலவே பெண் சிட்டு குருவியை அடைவதற்கு ஆண் சிட்டுக் குருவிகளிடையே கடுமையான போட்டியும் சண்டையும் நிலவும். அதில் வெற்றிபெறும் ஆண் குருவியே பெண் குருவியுடன் சேர முடியும்.  இனப்பெருக்க காலத்தில் ஆணின் அலகு சாம்பல் நிறத்தில் இருந்து கருப்பாக மாறி இருக்கும். சரியான ஜோடியை கண்டறிந்த பிறகு ; இணைசேரும் காலத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாய் திரியும்.  மேலும் மற்ற பறவைகள் போல இனப்பெருக்க காலத்தில் சிட்டுக்குருவிகள் மிக அழகாக நடனமாடும். இதில் ஆண் சிட்டுக்குருவி பெருமிதத்துடன் மார்பைத் தூக்கிக் காட்டி, "ட்சீன் ட்சீன் என்ற குரலில் பாடும்.  பிறகு இறக்கைகளை விரித்து அதை கீழே அடித்து, வாலை தூக்கிக்கொண்டு பெண் சிட்டுக்குருவியை சுற்றி தத்தித்தத்தி ஓடும்.

பெண் சிட்டுக்குருவியை வசிப்பதற்காக ஆண் சிட்டுக்குருவிகள் பண்ணும் ஒவ்வொரு செய்கையும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.  அப்போது தனக்குப் பிடித்த ஆண் குருவியை பெண் சிட்டுக்குருவி தேர்ந்தெடுக்கும்.  அக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளிப்பதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். அக்கொடுப்பினை இன்றைய தலைமுறையினர் பலருக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.  கடந்த 20ஆண்டுகளுக்குமுன் வரை கிராமங்கள் மற்றும் நகரங்களில் பார்க்கும் இடமெல்லாம் படபடன்னு சுதந்திரமாக பறந்து திரிந்துகொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் கூட்டத்தை இன்று காணமுடியவில்லை.  நம்ம வீட்டில் சிட்டுக்குருவிகள் கடைசியாக எப்போது கூடு கட்டின என்றால் அதற்கும் பதிலில்லை.  ஏனெனில், சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. குறிப்பாக சொல்வதென்றால், கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | கை விரித்த உற்ற நண்பனான சவுதி அரேபியா... அதிர்ச்சியில் பாகிஸ்தான்...!

மேலும் மனிதர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு முரணான சுற்றுச்சூழல் நடவடிக்கையானது சிட்டுக்குருவிகளின் அழிவுப் பாதைக்கு அடித்தளமிட்டுள்ளன.  அலைபேசி உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது ; அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளியேறும் அதிகபட்சமான மின்னலை கதிர்வீச்சானது ; சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஒருவேளை அது முட்டையிட்டாலும் அதன் கருவானது முழு வளர்ச்சியை அடைவதில்லை.. அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன.  மேலும், வீட்டுத் தோட்டங்கள் வயல்களில் செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்து விடுகின்றன. முதல் 15 நாளைக்கு குஞ்சுகளின் முக்கிய உணவு இந்த சிறு புழுக்கள்தான். அவை இல்லாவிட்டால் குஞ்சுகள் வளர்வது தடைப்படும். அது மட்டும் இல்லாமல் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் தானியங்கள் நஞ்சுவாகி விடுகின்றன. இதுதவிர, பெட்ரோல் டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் மீத்தைல் நைட்ரேட் என்ற நச்சுப் புகை சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சிகளை கொல்லுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இதனால் 'உயிரின உணவு சங்கிலி' தகர்ந்து போகிறது. புழுக்களின் அழிவால் சிட்டுக்குருவிகளும் மற்ற உயிரினங்களும்கூட பாதிக்கப்படுகின்றன.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் ; 13ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவியானது ; 5ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது என்பதுதான்.  ஆகவே... சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. அதற்காக, ஆல், அரசு மாதிரியான மரங்கள், அவரை,  புடலை மாதிரியான கொடிகள் என்று நமது மண்ணுக்கு ஏற்ற உள்ளூர் தாவரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். குறிப்பாக, வேலியோர தாவரங்களை வளர்க்க வேண்டும். ஏனென்றால் ; அவைதான் நமது இயற்கை சூழலை பாதுகாக்கின்றன.  மேலும் தோட்டங்கள் வயல்களில் பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இவை நுண்ணுயிர்கள்,  நன்மை செய்யும் பூச்சிகள் புழுக்களையும் சேர்த்து அழித்து விடுகின்றன. இதனால் குருவிகள் மாதிரியான பறவைகளுக்கான இரையும் சேர்ந்து அழிந்து போகிறது.  சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்கு நாம் உணவு வைக்கும் போது தானியங்களை மட்டுமே வைக்க வேண்டும்.

உப்பும் எண்ணெய்யும் மிகுந்த மக்கிப்போன உணவு வகைகளை பறவைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கம்பு, அரிசி, கோதுமை, திணை போன்றவற்றை தரலாம். குறிப்பாக கோடைக் காலங்களில் ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். இது பறவைகளின் தாகத்தை தணிக்கும்.  கட்டடங்கள் கட்டும்போது பறவைகள் கூடுகட்ட இடவசதி செய்து கட்டலாம். அப்படி வாய்ப்பு இல்லாதபோது பழைய காலணி பெட்டி அல்லது ஏதாவது ஒரு அட்டைப்பெட்டியை பூனை, காக்கை போன்ற பிற உயிரினங்கள் அணுக முடியாத உயரத்தில் வைக்கலாம். கொஞ்ச நாளிலேயே பறவைகள் அந்த செயற்கை கூட்டுக்கு வர தொடங்கும். அதன் மூலம் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கலாம்.  அதன்பயனாக... சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை மட்டுமின்றி ; மனிதர்களான நம்முடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தலாம். மேலும், மனிதயினத்தை  ஊடுருவி தாக்கும் பல்வேறு நோய்கள், மருத்துவ பிரச்சினைகளுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடுதான் முக்கிய காரணியாகும்.. எனவே சுற்றுச்சூழல் மேம்பாட்டால் சிட்டுக் குருவியினத்தையும் ; நமது உடல்நலத்தையும்  ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், இவ்வுலகில் மனிதர்கள் இன்றி ; பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இன்றி ; மனிதர்களால் வாழ முடியாது என்று பறவையியல் பேரறிஞர் சாலிம் அலி  - தனது ஆய்வு மூலம் ஆதாரப்பூர்வமான தரவுகளை நமக்களித்துள்ளார்.  இனியாவது பிற உயிரினங்கள் பாதிக்கப்படாத வகையில் வாழ்வியல் சூழலை அமைத்துக்கொள்ள மனித இனம் முன்வரவேண்டும். அப்போதுதான் இந்த பரந்து விரிந்த உலகம் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல ; எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை உணர்த்த முடியும்; நிரூபிக்க முடியும். ஆகையால், மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து வாழும் சிட்டுக்குருவி இனத்தை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பறவையினத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

எழுத்தாக்கம் :
இரா. அமர்வண்ணன்

மேலும் படிக்க | மர்மங்கள் நிறைந்த மினசோட்டா நதி! காணாமல் போகும் நதி நீர்!

Trending News