63 வருட திரை வாழ்வு... தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்... கமல்ஹாசனின் சாதனை பயணம் இதோ!

Kamal Haasan IIFA Awards 2023: சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், கடந்த 63 ஆண்டுகளாக அவர் சினிமாவில் சாதித்தவை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 06:44 PM IST
  • கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் காட்ஃபாதர் என்று கூறினால் கூட அது மிகையாகாது.
  • கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
  • மணிரத்னத்தின் இயக்கத்தில் நாயகனுக்கு பின் மீண்டும் கமல் நடிக்க உள்ளார்.
63 வருட திரை வாழ்வு... தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்... கமல்ஹாசனின் சாதனை பயணம் இதோ! title=

Kamal Haasan IIFA Awards 2023: அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) சார்பில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வரும் மே 26, 27 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது

தமிழ் சினிமா வரலாற்றைப் புரட்டினாலே கமல்ஹாசன் என்ற பெயர்தான் பொறிக்கப்பட்டுள்ளது.  'கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஒரு பாதி, தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்' என்று கூறினால் கூட அது மிகையாகாது.  சிறந்த இயக்குநர் கமல்ஹாசனை விட வேறு ஒருவர் இருக்க முடியுமா…? கண்டிப்பாக இருக்க முடியாது.

6 வயது முதல்  63 வருடங்கள் கழிந்துவிட்டது

கமல்ஹாசன் கலை உலகிற்கு அறிமுகமாகி இத்துடன் 63 வருடங்கள் கழிந்துவிட்டது. இதுவரை அவர் ஒர் நடிகனாக தனக்கென ஏதும் செய்துகொள்ளாமல் கலைக்காகவும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். இன்று நம் தமிழ் சினிமாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியதற்கு ஓர் முக்கிய காரணம் இவரின் தனிப்பட்ட சிந்திக்கும் தன்மையும் உழைப்பும்தான். 

மேலும் படிக்க | நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மரணம்! இறப்புக்குக் காரணம் போதை மருந்தா?

ஆறு வயது முதல் அறுபத்து மூன்று வயது வரை சினிமா வாழ்க்கை என்பது எளிதல்ல. கலை உலகில் இப்படி  ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கக் கருவியாக இருப்பது இவரின் முற்போக்கு சிந்தனைகள்தான்.  ஒரு முறை கமல்ஹாசனை அவரின் குடும்ப தோழி சாரா ராமச்சந்திரன், தயாரிப்பாளர் A.V மெய்யப்ப செட்டியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது தயாரிப்பாளர் மெயப்பனுக்கு கமல்ஹாசனை பிடித்துப் போக, AVM நிறுவன தயாரிப்பில் ஜாவர் சீதாராமன் எழுத்தில் பீம்சிங் இயக்கத்தில் செல்வம் என்னும் கதாபாத்திரத்தில் 5 வயது சிறுவனாக கமல்ஹாசன் நடித்து 1960 ஆகஸ்ட் 12இல் ஆறு வயதில் அவரது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மா வெளிவந்தது.  

Kamal Haasan

போடாத வேடங்களே இல்லை

படத்தில் நடித்த மற்றவர்களின் கதாபாத்திரங்களையும் தாண்டி கமலஹாசன் நடித்த கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினார். அந்த நடிப்பிற்காக 1961இல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கையால் கமல்ஹாசன் சிறந்த குழந்தை நடிகர் என்ற தேசிய விருதைப் பெற்றார். ஆறு வயதிலே நடித்த முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது என்ற செய்தியைக் கேட்கும்போதும் வியப்பாகத்தான் உள்ளது.

அதை தொடர்ந்து ஆனந்த ஜோதி, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை , வாணம்பாடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்போதிலிருந்து இப்போது வரை வியப்பை ஏற்படுத்தும்படியான நடிப்பை அவரின் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தான் வருகிறார். முக பாவனைகள் மற்றும் உடல்மொழி ஆகிய அனைத்தையும் மிகச் சிறப்பாகத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறார். ஊர் வட்டார மொழிகளைப் பேசி நடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. 

ஆனால் இவரோ சென்னை,திருநெல்வேலி மதுரை போன்ற அனைத்து வட்டார மொழிகளிலும் வசனம் பேசி நடிக்கின்றார். அதுமட்டுமின்றி இவரால் சரளமாகச் செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் வசனங்களைப் பேசி நடிக்க முடியும். இவரின் திரைப்படங்களைக் பார்க்கும் போது உண்மையிலேயே நடிக்கிறாரா இல்லை அவர்தான் அந்த கதாபாத்திரமா, என்று சந்தேகிக்கும் அளவிற்குக் கதாபாத்திரத்தில் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார். 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் எல்லா படங்களையும் அவர் நடிப்பிற்காக மட்டுமே கூட பார்க்கலாம். கமல்ஹாசன் திரைப்படங்களில் அவர் அணியாத வேடங்களே கிடையாது. எந்த வேடமணிந்தாலும் அவருக்கு மட்டும் கனகச்சிதமாக்கப் பொருந்தும். அந்த இடத்திற்கு ஏற்றார்போல உடல்மொழி மற்றும் குரலை மாற்றிப் பேசுவது மிகவும் அற்புதமாக இருக்கிறது. கமல்ஹாசனின் சினிமாவில் காதல் காட்சிகளுக்கும் முத்தக் காட்சிகளுக்கும் இந்தியாவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.   

பாலச்சந்தர் - கமல்ஹாசன்

கமல்ஹாசனிடம் நீங்கள் எப்படி இவ்வளவு அற்புதமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் கூறிய பதில், 'இதற்கெல்லாம் காரணம் என் கலை உலகத் தந்தை மற்றும் எனது திரைப்பட இயக்குநர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் தான்' எனக் கூறுகிறார். கமலஹாசனுக்கு 'single take artist' என்ற பெயர் உள்ளது, அப்படி என்றால் ஒரு காட்சியை ஒரே முறையில் சிறப்பாக நடிப்பது என்று பொருளாகும். அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் கமல்ஹாசன் மட்டும்தான். 

கமல்ஹாசனை பற்றி பிற நடிகர்கள்

இன்னும் இவரது நடிப்பைப் பற்றிச் சொல்லப்போனால் ரஜினி, அஜித், விஜய், கார்த்திக் போன்ற தமிழ் திரையுலகின் நடிகர்களும், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு நடிகர்களும் கூட கமல்ஹாசனின் நடிப்பைப் பார்த்து நடிக்கப் பழகிக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனே,"இந்தியாவிலேயே சிறந்த நடிகராக இருக்கும் கமலஹாசன் ஐயா என்று" தனது வாழ்த்துறையில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஒரு மேடையில்,"நான் கமல்ஹாசனைப் பார்த்துத் தான் நடிக்கத் தொடங்கினேன் ஆனாலும் அவர் போன்று என்னால் தத்ரூபமான நடிப்பை எந்த திரைப்படத்திலும் கொடுக்க முடியவில்லை" எனக் கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி உண்மையான சகலகலா வல்லவன் யார் என்று கேட்டால் அது கமல்ஹாசன்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். ஏன் மலையாள நடிகர் மோகன்லால் கூட ஒருமுறை மேடையில் கமலஹாசனை போல் இருக்க முயற்சி செய்யாதீர்கள் எவராலும் கமல்ஹாசனைப் போல் இருக்க முடியாது என பேசினார்.

இயக்குநர் கமல்ஹாசன் திரைப்படம் 

இயக்குநர் கமல்ஹாசன் திரைப்படத்தை நம் பார்த்தோமானால் ஒவ்வொரு படைப்பும் உலகத்தரத்திற்கு இருக்கும். அதற்குக் காரணம் முழுக்க முழுக்க இயக்குநர் கமலஹாசனின் எழுத்தும் இயக்கமும் தான். கமர்சியல் அல்லது கலைப்படம் என எந்த படமாக இருந்தாலும் அதனை அவர் முழுவீச்சுடன் கையாண்டு வருகிறார். 

Kamal Haasan

ஒவ்வொன்றையும் சிற்பி சிலையைச் செதுக்குவது போலப் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டு வருகிறார். ஏனெனில் இதுவரை அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே ஒரு மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாகவும் கலாச்சார படைப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு முறை கமலஹாசன் இயக்கிய திரைப்படத்தைப் பார்க்கும் போதும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். அது ஒரு வரலாறாக இருக்கலாம் அல்லது நாத்திகம் அதிகமாக இருக்கலாம் அல்லது மனிதம் பற்றிய புரிதலைக் கொடுக்கலாம் அல்லது திராவிடம், கம்யூனிசம் , தீவிரவாதம் பற்றி என்று கூட இருக்கலாம், அதுவும் இல்லை என்றால் ஒரு காலாச்சாரமாகக் கூட இருக்கலாம்.

உள்ளூர் அரசியல் அல்லது உலக அரசியலாக இருக்கலாம் அது ஏதுவாக இருந்தாலும் அதன் மேல் ஒரு முழு ஈர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர் இதுவரை மொத்தம் 231 திரைப்படங்கள் 6 மொழிகளில் நடித்துள்ளார். நம் திரைத்துறையைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் கமல்ஹாசன் என்ற முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இங்கே எத்தனை இயக்குநர்கள் இயக்கப்படும் சம்பவங்களைக் கூட மிகப் பக்குவமாக இயக்குநர் கமலஹாசன் கையாண்டு கொண்டிருக்கிறார்.
 
கமல்ஹாசன் பேசும் அரசியல்

நல்ல கலைஞன் என்பவன் எந்த ஒரு செய்தியையும் நேரடியாக கூறக் கூடாது. அப்படி கூறினால் அது கருத்துத்திணிப்பாகவோ அல்லது பிரச்சாரமாகவோ மாறிவிடும். ஒரு சம்பவத்தை அப்படியே திரைப்படமாக எடுத்தாலும் அது ஆவணப்படமாக தான் இருக்கும். அதனால் முடிந்தவரை ஒரு கலைஞனின் தனிப்பட்ட கருத்தை மறைமுகமாக கலை உணர்வுடன் சமூக பொறுப்புடன் கதை திரைக்கதை வாயிலாக பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அது திரைப்படமாகவும் இருக்கும்.  

மேலும் படிக்க | Sarath Babu Passed Away: நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்...

இதில் இயக்குனர் கமலஹாசன் கைத்தேர்ந்தவர். ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1 மற்றும் 2, சேச்சி 420 ஆகிய திரைப்படங்களை எழுதி இயக்குமும் செய்துள்ளார். அனைத்துமே மிகச் சிறந்த படைப்பாக உள்ளன. அதுமட்டுமின்றி அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், அன்பே சிவம், உத்தம வில்லன் என பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.  ஒவ்வொரு முறையும் கமல்ஹாசன் இயக்கும் திரைப்படத்தின் மீது தணிக்கை குழு அல்லது அரசியல் கட்சிகளும் மத இயக்கங்கள் வழக்கு தொடுத்து சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.  

கமல் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்

Movie magic software for script writing - digital editing - dolby stereo - aero 3D 7.1 sound - motion control rig - digital camera(red epic) - animation sequence என மொத்தம் ஏழு வித தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே முதன் முதலில் தனது தயாரிப்பிலும் அறிமுகம் செய்துள்ளார். அவரின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம்தான் லைவ் டப்பிங்(Live Dubbing) செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kamal Haasan

சினிமா துறையில் வாங்கிய விருதுகள்

உலக அளவில் பிரஞ்ச் நாட்டு அரசாங்கத்தால் சிறந்த நடிகர்களுக்காக தரப்படும் உயரிய 'செவாலியே' விருதை வாங்கியவர் என்ற பெருமையையும், இந்தியாவிலேயே உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் வாங்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர், கமல். இதுமட்டுமின்றி 4 தேசிய விருதுகள், 9 தமிழ்நாடு மாநில விருதுகள் என நடிப்புக்காக மட்டுமின்றி சினிமாவில் பலதுறைகளில் மொத்தம் இதுவரை 110 விருதுகளைப் பெற்றுள்ளார். ஃபிலிம்ஃபேர் நடத்திய விருந்தளிக்கும் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளிலும் சிறந்த நடிகர் என்ற விருதுக்கு சொந்தக்காரர் கமலஹாசன் மட்டுமே. 

அதிக ஆஸ்கர் பரிந்துரை என்ற அடையாளத்தையும், இந்தியாவிலே அதிக விருதுகளை வாங்கிய பெருமை கொண்டவர். இதுதான் உண்மையான ஹிமாலயன் வெற்றி. இவர் தொட்ட பெருமையை வேறு யாராலும் தொட முடியுமா. இதன்பிறகு விருது அளிக்கும் குழுவிற்கு இவரே கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இனி விருதுகள் எனக்கு வேண்டாம் இனிவரும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு விருதுகளை கொடுங்கள், அவர்களை ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.

ஒரு உண்மையான கலைஞனுக்கு அல்லது கலைக்கோ எப்போதுமே முடிவென்பது கிடையாது. கமலஹாசன் சொன்னபடி அவரின் கலை படைப்புகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்குமோ அது நிலைத்து நிற்கட்டும், அதுவே கமல்ஹாசன் அவர்கள் கலைமீது வைத்திருக்கும் காதலின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க | Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News