ஜல்லிக்கட்டு சர்ச்சை: வன்முறை அதிர்ச்சியளிக்கிறது- கமல்

Last Updated : Jan 24, 2017, 01:31 PM IST
ஜல்லிக்கட்டு சர்ச்சை: வன்முறை அதிர்ச்சியளிக்கிறது- கமல் title=

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வெளியேற்றப்பட்டார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து டிவீட் செய்த கமலஹாசன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சென்னையில் ஏற்பட்ட வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. போலிசார் நடத்திய தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போராட்டம் நடத்திய விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.  இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது. போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலை தடுக்க வேண்டும்" என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக்களத்துக்கு வந்திருப்பார். போராட்டக்களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார். அறவழியில் முடித்து வைத்திருப்பார்.

போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லைகள் நாமாக உருவாக்கியது. எல்லைகளை அளித்துவிட்டு மனிதர்கள் அனைவரும் அன்போடு வாழ வேண்டும் என்பதே எனது கருத்து.

ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

விலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில், ஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என கமல் தெரிவித்தார்.

Trending News