நடிகை ரித்திகா நாயகியாக நடித்துள்ள மீ டூ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது!!
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, இந்தியத் திரையுலகிலும் பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இதை கதைக் கருவாகக் கொண்டு #MeToo என்ற படத்தை தமிழில் இயக்கியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஷவர்தன்.
இப்படத்தில் இறுதிச் சுற்று பட நாயகி ரித்திகா கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் காரணமாக படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது.
பின்னர் நடிகை கௌதமி தலைமையிலான மறு சீராய்வுக்குழுவுக்கு படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்த முறை படத்தின் தலைப்பு காரணமாக சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதன் தயாரிப்பாளர் சஜித் குரேஷி நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளார்.
இது குறித்து, பலர் ஓவியா நடிப்பில் வெளியான 90 ML படத்திற்கு அனுமதியளித்தவர்கள் ஏன் இதுபோன்ற படத்திற்கு தடை விதித்துள்ளனர் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.