சீனர்களை மிஞ்சிய இந்தியர்கள்: சிங்கப்பூரில் இந்திய பயணிகள் நிகழ்த்திய புதிய சாதனை

பயணிகள் வருகை அதிகரித்த பிறகு, சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை சார்ந்துள்ள வணிகங்களும் அதிகரித்து வருகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2022, 05:10 PM IST
  • சிங்கப்பூரில் மீண்டும் மேம்படுகிறது சுற்றுலாத்துறை.
  • சிங்கப்பூரில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • இந்திய பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
சீனர்களை மிஞ்சிய இந்தியர்கள்: சிங்கப்பூரில் இந்திய பயணிகள் நிகழ்த்திய புதிய சாதனை   title=

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்காக சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் திறந்ததிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் மிக அதிக பயணிகள் இந்தியாவிலிருந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, மற்ற நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி உள்ளது. இவர்களுக்கு பரிசோதனைகளும் தனிமைப்படுத்தலும் தேவையில்லை. 

பயணிகள் வருகை அதிகரித்த பிறகு, சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை சார்ந்துள்ள வணிகங்களும் அதிகரித்து வருகின்றன. 

ஓபன் டாப் டூர் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் (பக்கத்தில் இருக்கையுடன் கூடிய மூன்று சக்கர சைக்கிள்கள்) போன்ற பிரபலமான சுற்றுலா சேவை வாகனங்களை முறையே சன்டெக் சிட்டி மற்றும் ரோச்சர் சாலையில் தற்போது காண முடிகின்றது. இந்த காட்சிகள் கோவிட் நோய்க்கு முன்னரே காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகப்பெரிய பாதிப்பை கண்ட துறைகளில் சுற்றுலாத்துறை முக்கிய துறையாகும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்களின் நடமாட்டம் ஸ்தம்பித்ததை அடுத்து, இந்த துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த விற்பனையில் 90% வரை தள்ளுபடி 

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் மாதத்தின் எண்ணிக்கையான 121,200லிருந்து 294,200 ஆக, இருமடங்கு அதிகமாக இருந்தது. இது சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தால் வெளியிடப்பட்ட எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2019 ஆம் ஆண்டில், அதாவது கோவிட்-க்கு முந்தைய ஆண்டில் சிங்கப்பூர் பெற்ற சராசரி மாதாந்திர பயணிகளின் எண்ணிக்கை 1.638 மில்லியனாக இருந்தது. இவர்களில் 300,000 க்கும் மேற்பட்டவர்கள் சீனாவிலிருந்து வந்தவர்கள். சீனா, சிங்கப்பூரின் மிகப்பெரிய சுற்றுலா மூலமாக இருந்து வருகிறது. 

தற்போது சீன பயணிகளுக்கு ஈடாக இந்திய பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகளை அனுப்பிய நாடுகளின் வரிசையில்  இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 95,500 இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். 89,700 பயணிகளுடன் இந்தோனேஷியா இரண்டாவது இடத்திலும் 45,600 பயணிகளுடன் மலேசியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

இந்த எண்ணிக்கையில், சிங்கப்பூர் நில எல்லை வழியாக நாட்டிற்குள் வரும் மலேசியர்கள் கணக்கிடப்படவில்லை. நில எல்லை இப்போது முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வழியைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் தினமும் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து மார்ச் மாதத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், இந்த மாதம் கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் 50 சதவீதத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் காரணமாக மூடப்பட்ட இரண்டு முனையங்களில் ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சாங்கி விமான நிலையத்தில் நான்கு முனையங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பார்வையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் துறைகள் தேவையைத் தக்க வைத்துக் கொள்ள சிரமப்படுகிறார்கள். பணியாளர்கள் பற்றாக்குறையால், வாடிக்கையாளர்களுக்கு மோசமான சேவை வழங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.  போதுமான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் முடிந்த வரை உதவி வருகிறது.   

சிராங்கூன் சாலையில் உள்ள லிட்டில் இந்தியா மீண்டும் சலசலக்கத் தொடங்கியுள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரபரப்பான நடமாட்டம் இங்கு காணப்படுகின்றது. இதுவும் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய ஒரு காட்சியாகும். 

மேலும் படிக்க | இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News