இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்: விடுவிக்க குரல் கொடுத்த சீமான்

Seeman on Fishermen Rescue: ஆளும் அரசுகள் மற்றும் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பாவி தமிழக மீனவரின் உயிர் அநியாயமாக பறிபோகாமல் காத்திருக்க முடியும்: சீமான்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 01:19 PM IST
  • இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
  • கடந்த 3 மாத காலமாக நான்கு தமிழக மீனவர்களும் பல்வேறு சிறைக்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்: சீமான்
  • இறந்த மீனவச்சகோதரர் மரியஜெசின்தாசின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்: சீமான்
இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்: விடுவிக்க குரல் கொடுத்த சீமான் title=

இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிகையில், ‘தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இந்தோனேசிய நாட்டின் சிறைச்சாலையில் பெருங்கொடுமைகளுக்கு உள்ளாகி, அதில் ஒரு மீனவர் சிறையிலேயே மரணித்த செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. மீனவர்களின் குடும்பத்தினர் பலமுறை முறையிட்டும், மீனவர்களை மீட்க எவ்வித முயற்சியும் எடுக்காத இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக அந்தமான் தீவிலிருந்து விசைப்படகின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சென்றநிலையில், மார்ச் 7ஆம் நாள் இந்தோனேசியக் கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 4 மீனவர்களை ஏப்ரல் மாத இறுதியில் இந்தோனேசிய அரசு விடுதலை செய்த நிலையில், மரியஜெசின்தாசு, சிஜின், ஜோமன், இம்மானுவேல் ஜோசு ஆகிய நான்கு மீனவர்களை விடுவிக்க மறுத்து வருகிறது. 

மேலும், கடந்த 3 மாத காலமாக நான்கு தமிழக மீனவர்களும் பல்வேறு சிறைக்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசியச் சிறைக்காவலர்கள் தந்த நெருக்கடியாலும், துன்புறுத்தலாலும், மரியஜெசின்தாசு என்ற மீனவர் கடந்த மே பத்தாம் நாள், உடல் நலக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாமல், இந்தோனேசிய சிறை நிர்வாகம் மேலும் கொடுமைப்படுத்தியது. 

மேல்ம் படிக்க | Continuing Student Death: சிவகாசியில் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை 

இதனால் உடனிருந்த மீனவர்கள், மரியஜெசின்தாசை இந்தியா கொண்டுசென்று உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்தபோதும் இந்தோனேசிய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை.

இதுகுறித்த தகவலறிந்த குடும்பத்தினர், உடனடியாகத் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், மீனவரைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த மே மாதம் 20ஆம் நாள் இந்தோனேசியச் சிறையிலேயே சகோதரர் மரியஜெசின்தாசு உயிரிழந்த பெருந்துயரமும் நிகழ்ந்தேறியது. இந்தோனேசியச் சிறையதிகாரிகளின் துன்புறுத்தலும், இந்தியத் தூதரக அதிகாரிகளின் நடவடிக்கையின்மையும், தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்குமே மீனவர் மரியஜெசின்தாசு மரணத்திற்கு முக்கியக் காரணமாகும். 

ஆளும் அரசுகள் மற்றும் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பாவி தமிழக மீனவரின் உயிர் அநியாயமாக பறிபோகாமல் காத்திருக்க முடியும்.

ஆகவே, இந்தோனேசியச் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுந்துயரங்களுக்கு ஆட்பட்டுவரும் தமிழக மீனவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசு இனியும் எவ்வித அலட்சியமும் காட்டாமல், இந்திய தூதரகத்தின் மூலம் மீதமுள்ள மீனவர்களையாவது உயிருடன் தாயகம் கொண்டுவந்து, பரிதவித்துப்போயுள்ள அவர்களின் குடும்பத்தினருடன் ஒப்படைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், இறந்த மீனவச்சகோதரர் மரியஜெசின்தாசின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும், பறிக்கப்பட்ட விசைப்படகையும் மீட்டுத்தர வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மகனின் பிணத்துடன் மூன்று நாட்களாக வாழ்ந்த தாய் ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News