Weight Loss Tips: உடல் பருமன் உங்களை பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு கரையாமல் அடம் பிடிக்கிறதா? உங்களுக்கான தீர்வை இங்கே காணலாம்.
Weight Loss Tips: ஆரோக்கியமாக வாழ, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உடல் பருமனை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் தவிர்க்கலாம். இந்த பழக்கவழக்கங்களை காலை வழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், பிடிவாதமான தொப்பை கொழுப்பையும் விரட்டி விடலாம். உடல் பருமனை குறைக்க உதவும் அந்த காலை பழக்கங்கள் பற்றி இங்கே காணலாம்.
காலை வேளையில் சில பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். எடை இழப்புக்கு உதவும் சில காலை பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சியான உணர்வு ஏற்பட முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கியிருக்க வேண்டும். புத்துணர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கவும் உறக்கம் உதவும். போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் பருமனுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
உடல் கொழுப்பை கரைக்க காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். இது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் கலோரிகளை வேகமாக எரிக்க முடியும்.
காலையில் அனைவரும் தேநீர் அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் சேர்ப்பதற்கு பதிலாக கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரகம் டீ, ஓம தேநீர், சோம்பு டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். அது உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.
நாள் முழுதும் நாம் ஆரோக்கியமாக உணரவும், தேவையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கவும், காலை உணவு பெரிய அளவில் உதவுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிக கலோரிகளை சேர்க்காத, அதிக கொழுப்பு இல்லாத, சமச்சீரான காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
காலையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதற்கு காலை உணவில் முட்டை, தயிர் அல்லது புரோட்டீன் ஷேக் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இவற்றால் உடல் எடை குறைவதோடு தசைகள் வலுவாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க, உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும், உடல் செயல்பாடுகளும் மிகவும் அவசியம். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, காலை வேளையில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் மூலம் கலோரிகள் வேகமாக குறைகின்றன. தொப்பை கொழுப்பு (Belly Fat) குறைந்து உடல் எடை குறைய தினமும் உடற்பயிற்ச்சி, யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என இவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
சர்க்கரை அளவு அதிகமாக உள்ள சீரியல்ஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் இனிப்பு பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இனிப்பு உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம், இன்சுலின் திடீரென அதிகரிக்கும் ஆபத்தை தவிர்க்கலாம். இது கலோரி உட்கொள்ளலையும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக கொழுப்பு உடலில் சேராமல் இருக்கும்.
எடை இழப்பு மட்டுமல்லாமல் அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் திட்டமிடுவது மிக அவசியம். அடுத்த நாளுக்கான காலை உணவு, உடற்பயிற்சி, பழச்சாறுகள், மூலிகை நீர் என நீங்கள் எதை உட்கொள்ள உள்ளீர்களோ அதற்கான திட்டமிடலை முந்தைய நாளே செய்வது நல்லது.
இந்த காலை பழக்கங்களுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.